நெய்வேலி, டிச. 14:
விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்களால் உயிரிழப்பு மற்றும் கை, கால் இழப்பு தொடர் கதையாகி உள்ளது. சாலையையும், பாலங்களையும் சீரமைக்க வேண்டிய நெடுஞ்சாலைத் துறையினர் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நெடுஞ்சாலைத் துறையின் போக்கைக் கண்டித்து பண்ருட்டி எம்எல்ஏ தலைமையில் இம்மாதம் 26-ம் தேதி வடலூரில் மறியல் போராட்டமும் நடைபெறவுள்ளது. விக் கிரவாண்டி-தஞ்சை சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு 3 ஆண்டுக்கு மேலாகிறது. 167 கி.மீ. உள்ள இச் சாலையில் 156 சிறிய பாலங்களும், 60-க்கும் மேற்பட்ட பெரிய பாலங்களும், 2 தரைப் பாலங்களும் உள்ளன. இச்சாலையில் கனரக வாகனப் போக்குவரத்து தற்போது அதிகரித்தவண்ணம் உள்ளது. மிகவும் குறுகலான இச்சாலையில் வாகன விபத்தும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. மேலும் சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்த முயற்சிக்கும் போது சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கவிழும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. இச்சாலையில் வடலூர் அருகே கண்ணுத்தோப்பு கிராமத்தில் உள்ள மிகக்குறுகலான பாலத்தில் மாதத்துக்கு ஒரு விபத்து வீதம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு விபத்தின் போது பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுவதும், பின்னர் அவை சம்பிரதாயத்துக்கு கட்டப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. பாலத்தில் ஏன் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது, அவற்றை தடுக்க என்னவழி என்பது குறித்து இதுவரை நெடுஞ்சாலைத் துறை ஆய்வு நடத்தியதா என்பது கேள்விக்குறியே. குறைந்தபட்சம் பாலத்தின் நிலை குறித்தும், பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லை என்பதை சுட்டிக்காட்ட கூடிய விளம்பரத் தட்டிகூட வைக்கப்படாததும் பெரிய குறையாகவே காணப்படுகிறது. இந்நி லையி ல் சனிக்கிழமை இரவு இரும்புக் குழாய்களை ஏற்றிவந்த லாரி ஒன்று சாலையின் விளிம்பு தெரியாமல் தலைக்குப்புற கவிழ்ந்ததில் லாரி உருக்குலைந்துள்ளது. மேலும் லாரியின் டிரைவருக்கு தலையில் பலத்தக் காயமும், கிளீனருக்கு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சாலையில் உள்ள பாலங்களை உடனடியாக சீரமைக்கக் கோரி பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். சாலையில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கூடுதல் பொறியாளர் அதிபதி கூறியது: இச்சாலையில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பாக மதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது. மார்ச் மாதத்தில் மதிப்பீட்டு அறிக்கை கிடைத்தவுடன் ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கிவிடும் என்றார் அதிபதி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக