கடலூர், டிச. 2:
கடலூர் நகர பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு மேலும் ரூ.26 கோடி வழங்கும் வகையில் திருத்திய மதிப்பீட்டுக்கு கடலூர் நகராட்சி புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ÷கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.40.40 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 3 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படவில்லை. 60 சதம் பணிகள் முடிந்து விட்டதாக குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்து உள்ளது. ஆனால், 50 சதம் பணிகள் கூட முடிவடையவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள், பள்ளங்கள் முறையாக மூடப்படாததாலும் சாலைகள் போடப்படாததாலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதாளச் சாக்கடை திட்டம் மீதே மக்களுக்கு பெரிதும் வெறுப்பு நிலவி வருகிறது. ÷இந்த நிலையில் அத் திட்டத்துக்கான மதிப்பீட்டை ரூ.66.03 கோடியாக உயர்த்தி அதாவது மேலும் ரூ.25.63 கோடி ஒதுக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த முடிவுக்கு கடலூர் நகராட்சி புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. திருத்திய மதிப்பீட்டின்படி இத்திட்டத்தின் ஆண்டு பராமரிப்புச் செலவு 20.79 லட்சம். இத்திட்டத்தில் வீடுகளை இணைக்க வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மக்கள் வைப்புத் தொகை செலுத்த வேணடும். மாதம்தோறும் ரூ.70 முதல் ரூ.100 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும். மாதக் கட்டணம் ரூ.140 முதல் ரூ. 1,200 வரை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பா தாள சாக்கடைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆனந்த், சரளா, காங்கிரஸ் உறுப்பினர் சர்தார், அ.தி.மு.க. உறுப்பினர் குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 60 சதம் பணிகள் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்கள். முடிவுற்ற பணிகளே திருப்தியாக இல்லை. அப்படி இருக்க மீதம் உள்ள 40 சதம் பணிக்கு ரூ.26 கோடி கூடுதலாக ஒதுக்குவது முறையல்ல என்று அவர்கள் தெரிவித்தனர். ÷ப தில் அளித்துப் பேசிய நகராட்சித் தலைவர் து.தங்கராசு, திட்டத்தில் பல மாறுதல்களை அரசு செய்து உள்ளது. ரூ.3 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது ரூ.12 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. கழிவு நீரை நவீன முறையில் சுத்திகரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். எனவே திட்ட மதிப்பீடு உயர்ந்து இருக்கிறது என்றார்.
இதை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஆனந்த், சரளா ஆகியோர் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, அவையின் முன்னால் அமர்ந்தனர். அவர்ளை தி.மு.க. உறுப்பினர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இரு உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக