பண்ருட்டி, டிச. 2:
பண்ருட்டி பகுதி முந்திரி விவசாயிகளுக்கு தரமான முந்திரி ஒட்டுக் கன்றுகள் மானிய விலையில் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பண்ருட்டி பகுதியில் புதிதாக முந்திரி பயிர் செய்யும் விவசாயிகள், அதிக மகசூல் தரும் வி.ஆர்.ஐ.3 ரக ஒட்டுச் செடிகளை நடப்பு பருவத்தில் 7 ல 7 மீட்டர் இடைவெளியில் ஏக்கருக்கு 80 கன்றுகளை நடவு செய்யலாம். தேசிய தோட்டக் கலை இயக்க திட்டத்தில் புதிய பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு தோட்டக் கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட இக்கன்றுகள், நோய், பூச்சி தாக்குதல் குறைவாகவும், காய்ப்புத்திறன் மற்றும் உடைப்புத்திறன் அதிகமாகவும் கொண்டவை. இத்தகைய தரமான முந்திரி ஒட்டுக் கன்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
மேலும் வேப்பம் பிண்ணாக்கு, டிரைகோடர்மாவிரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் எண்டோசல்பான் போன்ற இடுபொருள்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.
தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பண்ருட்டி வட்டாரத்துக்கு 125 ஹெக்டர் புதிய பரப்பில் முந்திரி சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக் கலை உதவி அலுவலர்களை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயனடையும்படி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக