கடலூர், டிச. 2:
நடுக்கடலில் கடலூர் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. க டலூரை அடுத்த தாழங்குடா மீனவர்கள் கடந்த நவம்பர் 24-ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, இந்தியக் கடற்படை.யினர் வழிமறித்து அடையாள அட்டை இருக்கிறதா படகுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனவா என்று கேட்டும், 12 மைல் தூரத்துக்கு மேல் ஏன் வந்தீர்கள் என்றும் கேட்டு மிரட்டினர். 50க்கும் மேற்பட்ட மீனவர்களைத் தடியால் தாக்கினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அனைத்து மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசினார். இக்கூட்டத்தில் இந்தியக் கடற்படைப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.
எனினும் நடந்த தாக்குதலுக்கு கடற்படை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததாகவும், இனி இத்தகைய சம்பவம் நிகழாது என்று கடற்படை அதிகாரிகள் உறுதி அளித்து இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். தாழங்குடா மீனவர் கிராமத்தில் கடற்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முகாமிட்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு முகாம் நடத்தினர். மீனவர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அவற்றை எடுத்துச் செல்லலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை கடலூரை அடுத்த சொத்திக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் 3 படகுகளில் மீன் பிடிக்கச் சென்று இருந்தனர். அவர்களை இந்தியக் கடற்படையினர் வழிமறித்துத் தாக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு படகில் இருந்த மீனவர்கள் ஞானவேல், குணபாலன் ஆகியோர் தடியால் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், சொத்திக் குப்பம் மீனவர்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை எடுத்துச் சென்று உள்ளனர். அவைகள் எதையும் பார்க்காமல் இந்தியக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கி உள்ளனர். இது மிகவும் கண்டிக்கத் தக்கது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக