கடலூர், டிச. 2:
கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு ரூ.26 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்வது முறையல்ல என்று கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக 150 கி.மீ. நீளச் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். போக்குவரத்து நெருக்கடியும் மக்கள் சாலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. 18 மாதங்களில் முடிக்க வேண்டிய பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் சாலைகளில் ஏராளமான விபத்துகள் நிகழ்கின்றன.
இத்திட்டத்தை நிறைவேற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் கவலை அளிக்கிறது. ஒப்பந்தக்கார்கள் இத்திட்டத்தை நிறைவேற்றும் திறனற்றவர்களாக இருக்கிறார்கள். ஒப்பந்தக்காரர் மனது வைத்தால்தான் கடலூர் மக்களைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இத்திட்டத்துக்கு அரசு ரூ.25.66 கோடி கூடுதலாக வழங்க நகராட்சி பரிநதுரைத்து உள்ளது. ஒப்பந்தக்காரர் ஒப்பந்தப்படி பணிகளை முடிக்காமல், காலதாமதம் செய்வதும், 50 சதம் பணிகள்கூட முடிவடையாத நிலையில், இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
உடைக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிட ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளபடி, ஒப்பந்ததாரர் நெடுஞ்சாலைத் துறைக்கும், நகராட்சிக்கும் பணம் செலுத்தி இருக்கிறாரா? மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிட நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை செலவிட்ட தொகை ஒப்பந்ததாரரிடம் பிடித்தம் செய்யப் பட்டதா? மற்றும் ரூ.40 கோடி செலவில் நடந்துள்ள பணிகள் குறித்து, பணிகள் வாரியாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
வெளிப்படையான அணுகுமுறையை நிர்வாகம் ஏற்படுத்துவதன் மூலம், ஒப்பந்தக்காரர் முறையாக செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் மருதவாணன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக