சிதம்பரம்:
வீராணம் ஏரி மற்றும் கொள்ளிடக்கரையை தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு தலைமைப் பொறியாளர் அன்பழகன் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் ஆய்வு மேற்கொண்டார்.÷கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருவதால் ஒவ்வொரு ஆண்டும் முழுக்கொள்ளளவு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் ஏரியின் மேல்கரை கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து நெற்பயிர்கள் பாதிப்படைகின்றனர். திருநாராயூர் நந்திமங்கலம், அத்திப்பட்டு, சித்தமல்லி உள்ளிட்ட கிராமங்களில் நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்கவும், நீரைத் தேக்கி வைக்கவும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு தலைமைப் பொறியாளர் அன்பழகனுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். தலைமைப் பொறியாளர் கோரியதன் பேரில் கடலூர் மாவட்ட நிர்வாகம் வெள்ளத்தை தடுக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் முன்மாதிரி வரைவு திட்டத்தை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் தலைமைப் பொறியாளர் அன்பழகன் வியாழக்கிழமை மாலை வீராணம் ஏரிக்கரையை ஆய்வு செய்தார். வீராணம் ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு உள்ளது; எவ்வளவு நீரைத் தேக்கி வைக்கலாம்; ஏரியை தூர்வாரி அகலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். நபார்டு வங்கி உதவியுடன் ரூ.120 கோடி செலவில் கொள்ளிடக்கரையை அகலப்படுத்தி, பலப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையொட்டி தலைமைப் பொறியாளர் அன்பழகன் கொள்ளிடக்கரைப் பகுதியை வெள்ளிக்கிழமையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்ளிடக் கரையோரம் உள்ள படுகை நிலங்கள் விவசாயிகளுக்கு சொந்தமானதா வருவாய்த் துறையினருக்கு சொந்தமானதா என பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார். தலைமைப் பொறியாளருடன் கோட்டப் பொறியாளர் நஞ்சன், செயற்பொறியாளர் செல்வராஜ், வீராணம் ஏரி உதவிப் பொறியாளர்கள் சரவணன், மாணிக்கம், செந்தில்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக