கடலூர் :
போலி பிராந்தி தொழிற்சாலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய புவனகிரி போலீசார் 12 பேரை நேற்று அதிரடியாக மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம், புவனகிரியில் போலி பிராந்தி பாட்டில் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து எஸ்.பி., உத்தரவின் பேரில் சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கடந்த 10ம் தேதி புவனகிரி ஏ.எஸ்.ஆர். நகரில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை சோதனையிட்டு அங்கிருந்த இயந்திரங்கள், போலி லேபிள்கள், ஆயத் தீர்வு ஸ்டிக்கர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய் தனர். மேலும், இதுதொடர்பாக புதுச்சேரி மாநிலம் அரங்கனூர் வெங்கடேசனை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் கடந்த ஒன்னரை ஆண்டாக இந்த போலி மதுபான தொழிற் சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, புவனகிரி இன்ஸ்பெக்டர் கண்ணனை கடலூர் முதுநகருக்கும், தனிப் பிரிவு ஏட்டு லட்சுமிராமனை கிள்ளை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்து டி.ஐ.ஜி., மாசானமுத்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து எஸ்.பி., நேரடியாக விசாரணை மேற்கொண்டதில், போலீசாருக்கு தெரிந்தே போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை மாவட்ட குற்றப் பிரிவிற்கும், ஏட்டுகள் மற்றும் போலீசார் சுந்தரகுமார், முருகேசன், உதயகுமார், ஆறுமுகம், பாலசுந்தரம், ராமலிங்கம், உதயா செல்வம், கப்பதுரை, பாபு, முரளிராஜன், பார்த்தசாரதி ஆகிய 11 பேரை மாவட்டத்தின் பிற ஸ்டேஷன்களுக்கு மாற்றம் செய்தும், இவர்களுக்கு பதிலாக பிற போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து 10 பேர் புவனகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்து நேற்று மாலை உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக