சிதம்பரம்:
திமுக ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் கலர் டிவி, இலவச எரிவாயு, குடிசை வீடுகளுக்கு மாற்றாக கான்கீரிட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தொடராது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரத்தை அடுத்த திருநாரையூர் கிராமத்தில் 854 குடும்பங்களுக்கு கலர் டிவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று கலர் டிவிக்களை வழங்கிப் பேசியது:
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். கலர்டிவி வழங்க முடியாது; 1 கிலோ அரிசி ரூ.1-க்கு கொடுக்க முடியாது; கருணாநிதி பொய் சொல்கிறார் என ஜெயலலிதா சொன்னார். ஆனால் அனைத்தையும் வழங்கி ஜெயலலிதா சொல்வதுதான் பொய் என முதல்வர் நிருபித்துவிட்டார். இனிமேல் ஜெயலலிதா சொல்வது எதுவும் உண்மையல்ல என்பதற்கு இதுவே உதாரணம்.÷ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்கள் தொடராது. எனவே பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் நன்றியாக இருக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு திமுக ஆட்சியில்தான் நேரடியாக திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது திமுக அரசின் சாதனையாகும்.
தமிழகத்தில் 18 லட்சத்து 86 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.121 கோடியே 17 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 36,667 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. குடிசை வீடுகளை கான்கிரீட் விடுகளாக மாற்றும் திட்டத்தை வருகிற மார்ச் 3-ம் தேதி தஞ்சையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 21 லட்சம் குடிசைகள் அகற்றப்பட்டு கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. 6 ஆண்டுகளில் இத்திட்டம் முழுமைப்பெறும். தமிழகத்தில் அதிகளவில் குடிசை உள்ள மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது. கடலூர் மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக விளங்குகிறது. எனவே இந்த இரு மாவட்டங்களும்தான் அதிகம் பயன்பெறும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ம.சோழன் வரவேற்றார். குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன் முன்னிலை வகித்துப் பேசினார். மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமை வகித்துப் பேசினார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் வி.ஆர்.ராஜேந்திரகுமார், ஒன்றியக் கவுன்சிலர் தனலட்சுமி பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக