கடலூர் :
வணிகர்களை மிரட்டி மாமூல் பறிக்கும் ரவுடிகள் கும்பல் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார். தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நேற்று கடலூர் வந்தார். சில மாதங்களுக்கு முன் மஞ்சக்குப்பம் மார்க்கெட்டில் தீப்பிடித்து எரிந்த கடைகளையும், பஸ் நிலையத்தில் ரவுடிகள் மாமூல் கேட்டு தாக்கிய கடையையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடலூர் மாவட்டத்தில் வணிகர்களிடம் ரவுடிகள் "மாமூல்' கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை முழுமையாக ஒடுக்கப்பட வேண்டும்.
தற்போது அனைத்து அரசியல் கட்சிகளிலும், அரசியல்வாதிகளிடமும் மிதமிஞ்சிய அளவில் பணம் உள்ளது. அவர்கள் பெயரைச் சொல்லி ரவுடிகள் வசூல் செய்கின்றனர். "ஆன்லைன்' வணிகத்தினால் தற்போது ஏகபோக தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் 10 வணிகர்கள் செய்யக்கூடிய வியாபாரத்தை ஒருவரே செய்வதால் பலருக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இதுபோன்ற தவறான பொருளாதார கொள்கையால் இல்லாதவர்கள், வணிகர்களை மிரட்டி "மாமூல்' வசூலிப்பது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இனி வணிகர்கள் யாருக்கும் நன்கொடை கொடுக்க மாட்டார்கள். சென்னையில் உள்ளது போல் அனைத்து கடைகளிலும் "நன்கொடை இல்லை' என்ற அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் வணிகர் சங்க பேரவை மாநில இணை செயலர் கோபாலகிருஷ்ணன், நகர பேரவை துணை செயலர் மதிசேககர் மற்றும் நிர்வாகிகளுடன் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசை சந்தித்து பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக