உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

நெய்வேலியில் திடீரென இடம் மாறிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

நெய்வேலி:

                நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இயங்கி வந்த மோட்டார் ஆய்வாளர் வாகன அலுவலகம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே வியாழக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது.
            
             நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மோட்டார் வாகன ஆய்வாளர் (எம்விஐ) அலுவலகம் இயங்கி வந்தது. இந்நிலையில் மந்தாரக்குப்பம் பகுதியில் என்எல்சி முதல் சுரங்க விரிவாக்கம் நடைபெறவிருப்பதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், காவல்நிலையம், பள்ளிகள் உள்ளிட்டவை படிப்படியாக காலி செய்யப்பட்டு வருகின்றன.÷அதன்படி கடந்த 2 ஆண்டுக்கு முன்னர், நீதிமன்றமும் நெய்வேலி வட்டம் 20-க்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நெய்வேலி எம்விஐ அலுவலகமும் இடமாற்றம் செய்யப்படும் நிலையில் இருந்தது. 

                    அதற்காக நெய்வேலி தெர்மல் காவல்நிலையம் அருகே என்எல்சியின் பழைய குடியிருப்பு, ரூ.40 லட்சத்தில் கூடுதல் கட்டடங்களுடன் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது. இருப்பினும் அலுவலகம் தொடர்ந்து மந்தாரக்குப்பத்திலேயே இயங்கி வந்தது. இந்நிலையில் புதிதாக ரூ.40 லட்சத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்ட நெய்வேலி எம்விஐ அலுவலகம் திடீரென வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்களுக்கோ, ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகளுக்கோ, பத்திரிகை நிருபர்களுக்கோ எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் வியாழக்கிழமை வழக்கம்போல் நெய்வேலி எம்விஐ அலுவலகம் சென்ற பலரிடம், "அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால் ஒருவாரம் கழித்து வாருங்கள்' என அங்கிருக்கும் அலுவலக ஊழியர்கள் பதில் கூறி அனுப்பியுள்ளனர்.

              மேலும் புதிதாக ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் அலுவலகத்தின் பெயரும் இடம்பெறவில்லை. மோட்டார் வாகன ஆய்வாளரும் நியமிக்கப்படவில்லை. ஆர்.செல்வம் என்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கூடுதல் பொறுப்பாக இதைக் கவனிப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும் இவ்வலுவகத்துக்கென எல்லைகள் நிர்ணயிக்கப்படாததால், மோட்டார் வாகன ஆய்வாளர் எவரும் நெய்வேலியை விரும்புவதில்லை. இதனால் தனியாக மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் மந்தாரக்குப்பம் பகுதியில் வசிப்பவர்கள் விருத்தாசலம் எம்விஐ அலுவலகத்துக்கு செல்வதா அல்லது நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள எம்விஐ அலுவலகத்துக்கு செல்வதா என குழம்பிய நிலையில் உள்ளனர். இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் அலுவலகம் திடீரென ரகசியமாக இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மேலும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து கடலூர் மண்டல போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) ஜெயக்குமார் கூறியது: 

             "தற்போது ஆர்.செல்வம் எனும் ஆய்வாளர் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் வாகனப் பதிவு செய்ய விரும்புவோர் அவர்களுக்கு எங்கு விருப்பம் இருக்கிறதோ அங்கு பதிவு செய்து கொள்ளட்டும்' என்றார் ஜெயக்குமார். மேலும் திடீர் இடமாற்றம் குறித்து எதுவும் கூற மறுத்துவிட்டார். பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள ஒரு அலுவலகம் பல்வேறு காரணங்களால் இடமாற்றம் செய்வது என்பது தவிர்க்க முடியாதது. இருப்பினும் இடமாற்றம் தொடர்பாக அலுவலகத்தோடு தொடர்புடையவர்கள் மற்றும் பயனாளிகளுக்கு தகுந்த சமயத்தில் அவசியம் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது கூட அறியாமல் செயல்படும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலர்களின் இது போன்ற செயல்கள் எதிர்காலத்திலும் தொடராமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior