உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

அரசுத் தேர்வுகள் துறையில் தேங்கி கிடக்கும் 15 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள்


            போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் ஒட்டுமொத்தக் கல்வித்துறையைப் புரட்டி போட்டுள்ளது. அது ஒரு புறமிக்க, மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அரசு தேர்வுகள் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்ட 15 லட்சம் சான்றிதழ்கள், அப்படியே தேங்கி கிடக்கின்றன என்று கூறப்படுகிறது.

              போதிய பணியாளர்கள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் விண்ணப்பங்கள் தேங்கி கொண்டே போகின்றன என்று தெரியவந்துள்ளது.சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் துறை மூலம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கையைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் சார்பில் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அரசு தேர்வுகள் துறைக்கு விண்ணப்பம் செய்கின்றன.மத்திய-மாநில அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், ராணுவம், ஆசிரியர் பணியிடம், கருணை அடிப்படையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், பொறியியல், மருத்துவம் மற்றும் வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன.

               அரசு தேர்வுகள் துறைக்கு மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பெண் சான்றிதழ்கள், உண்மைத்தன்மை அறிவதற்கு வருகின்றன.ஆனால், இப்படி லட்சக்கணக்கில் வரும் மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்க வெறும் 20 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியை கண்காணித்து, ஒருங்கிணைத்து செயல்பட அதிகாரிகள் அளவில் ஒருவர் மட்டுமே உள்ளார். மூன்று அதிகாரிகள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு அதிகாரியே பணிபுரிந்து வருகிறார் என்று அரசு தேர்வுகள் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்துடன் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்தல், தேர்வு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற இதர பணிகளை செய்வதால், மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது.

              சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் துறை தலைமை அலுவலகத்தில் மட்டும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் உள்பட 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை செய்வதில் தொய்வு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேக்கம் ஏற்படுகிறது.  5 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள்கூட இன்னும் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. இப்படி லட்சக்கணக்கில் சான்றிதழ்கள் தேக்கமடைந்துவிடுகின்றன. தேக்க நிலையை சரிசெய்ய வேண்டுமெனில் போதிய பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற நிலைமை தவிர்க்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

            இதுபோல கடந்த சில ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் மதிப்பெண் சான்றிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சம் என கணக்கிடப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகள், சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து அரசு தேர்வுகள் துறையிடம் இருந்து எவ்வித பதிலும் வராதது கண்டு, இப்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிப்பதே இல்லை என்று கூறப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து அவை போலியானதா? உண்மையானதா? என கண்டறிந்து சொல்ல வேண்டிய அரசு தேர்வுகள் துறையில் நிலவும் ஆள்பற்றாக்குறை பற்றி அரசு கண்டும் காணாமல் இருப்பதுதான் இப்பிரச்னைக்கு மூல காரணம் என தெரியவந்துள்ளது. கல்வி வியாபாரமாகிவிட்ட நிலையில், போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை என தெரியவில்லை.

                   போதிய நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்த்து உண்மைத்தன்மையை தெரிவிக்க முடியாமல் போவதால், தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து படித்து பட்டம் பெற்று செல்லும் மாணவர்களை எப்படி அரசால் கண்டறிய முடியும் என்பதே கல்வியாளர்களின் கேள்வியாக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior