உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

சுற்றுச் சுவர்கள் இல்லாததால் பள்ளிகளை "சுற்றும்' பிரச்னைகள்


சிதம்பரம்:
 
             கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
 
             கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்தும், சுற்றுச் சுவர்கள் இல்லாமல் உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கீரப்பாளையம், கவரப்பட்டு, வல்லத்துறை, டி.நெடுஞ்சேரி, பரிவிளாகம், குருங்குடி, கருப்பேரி, கண்டமங்கலம், தாண்டவராயன்சோழகன்பேட்டை உள்ளிட்ட பள்ளிகளில் சுற்றுச் சுவர்கள் இல்லை. 
 
            காலையில் பள்ளிக்கு வரும் அப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் வருவதற்கு முன் அங்கு கிடக்கும் மது பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் அவலநிலை பல பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது.பல்வேறு கிராமங்களில் பள்ளிகள், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ளதால் பள்ளி வளாகத்தைச் சுற்றி முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால் ஆடு, மாடுகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து விடுவதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பயிலும் நிலை உள்ளது.குறிப்பாக, சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் அப்பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
 
             மேலும் இப் பள்ளியின் எதிர்ப்புறம் குளம் உள்ளது. சுற்றுச் சுவர் இல்லாததால் மாணவ, மாணவியர்கள் குளத்தில் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சம் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உள்ளது.அதேபோன்று காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துமிடமாக மாறி விடுகிறது அப்பள்ளி. அப்பள்ளியைச் சுற்றி முட்புதர்கள் உள்ளதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது.எனவே கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் தகுதி குறித்து கணக்கீடு செய்து புதிய வகுப்பறைகள் கட்டும்போது சுற்றுச் சுவரும் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior