உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

கடலூரில் மீனவர் வலையில் சிக்கிய வினோத பாம்புகள் : ஆய்விற்கு பின் மீண்டும் ஆற்றில் விடப்பட்டன


 
 
கடலூர் : 

             புதுச்சேரி அருகே உப்பனாற்றில் மீனவர் வலையில் சிக்கிய பாம்புகள், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஆய்விற்கு பின், விஷத்தன்மை அற்றவை என்பதை உறுதி செய்ததால், மீண்டும் உப்பனாற்றில் விடப்பட்டன.


              புதுச்சேரி மாநிலம் மூர்த்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 17ம் தேதி இரவு உப்பனாற்றில் மீன்பிடித்த போது, வலையில் 40க்கும் மேற்பட்ட பாம்புகள் சிக்கின. தகவலறிந்த கடலூர் வனவிலங்கு ஆர்வலர் பூனம்சந்த், 18 பாம்புகளை பிடித்து தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தார். பூனம்சந்த் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறை அதிகாரி துரைசாமி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் சீனுவாசன் ஆகியோர், பாம்புகளை பார்வையிட்டனர்.


ஆய்வு செய்த பேராசிரியர் சீனுவாசன் கூறியதாவது

             தண்ணீர் பாம்பிற்கும், கடல்வாழ் பாம்பிற்கும் இடைப்பட்ட இனம். இவை விலங்கியல் துறையில், "செரிபிரஸ் ஸ்டேசிஸ்' வகையை சேர்ந்தது. இதன் முகம் நாய் போன்றும், வாயில் கூறிய பற்கள் இருப்பதாலும், நாயை போன்று உறுமும் தன்மை கொண்டவை என்பதால் "டாக் பேஸ்டு எஸ்யூரிஸ் ஸ்நேக்' ( நாய் முகம் கொண்ட உவர் நீர் வாழ் பாம்பு) எனக் கூறப்படும். ஆறும், கடலும் சேரும் பகுதிகளில் வாழும். குறிப்பாக மாங்குரோவ் காடுகள் உள்ள பகுதிகளில் அதிகம் இருக்கும். விஷத் தன்மை அற்றது. முதலைகளை போன்று இதன் தோல், சொரசொரப்பாக இருக்கும். மீன்களே இதன் பிரதான உணவாகும். முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். 

              ஒரு பருவத்திற்கு ஆறு முதல் எட்டு முட்டைகள் இடும். இதன் நீளம் நான்கு முதல் ஆறு அடி இருக்கும். எட்டு முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழும். தற்போது மீனவர் வலையில் சிக்கிய பாம்புகளுக்கு நான்கு வயது இருக்கும். இந்த வகை பாம்புகள், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலக் காட்டிலும், புதுச்சேரி காரைக்கால் அரசலாறு கடலில் இணையும் பகுதியில் உள்ள மாங்குரோவ் காட்டிலும் அதிக அளவில் உள்ளன. இவ்வாறு சீனுவாசன் கூறினார். இப் பாம்புகள் விஷத் தன்மை அற்றவை என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, வன விலங்கு ஆர்வலர் வீட்டில் இருந்த 18 பாம்புகளையும் வனத்துறையினர் பிடித்துச் சென்று, மூர்த்திக்குப்பம் உப்பனாற்றில் விட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior