உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

கனவாகிப்போன கல்விச் சுற்றுலா!


சிதம்பரம்:

          கல்வித்துறை அதிகாரிகளின் முன் அனுமதியோடு கல்விச்சுற்றுலாவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால், கல்விச் சுற்றுலா என்பது மாணவர்கள் மத்தியில் வெறும் கனவாகவே உள்ளது.

             தமிழ், அறிவியல் மற்றும் வரலாறு பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், பொதுதகவல் தெரிந்து கொள்ளவும் பள்ளி மாணவ, மாணவியர்களை ஆண்டுதோறும்  கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். வரலாற்றுப் பாடங்களில் இடம் பெற்றுள்ள தஞ்சை பெரிய கோயில் மற்றும் சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பஸ்கள் மற்றும் வேன்கள் மூலம் கல்விச் சுற்றுலா சென்று வந்தனர்.

           கல்விச் சுற்றுலா செல்ல பஸ்களுக்கு முன்பணம் கொடுத்து ஒரு மாதத்துக்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு பிறகுதான் மாணவர்கள் ஒவ்வொருவராக கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்வது வழக்கம். தீவிபத்து, நீரில் மூழ்கி இறத்தல் போன்ற பல அசம்பாவிதங்கள் காரணமாக அரசு, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா செல்லும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல், உடன் செல்லும் ஆசிரியர்கள் குறித்த முழுவிவரத்துடன் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து அனுமதி கிடைத்த பின்னரே கல்விச்சுற்றுலா செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. 

              இந்த உத்தரவினால் பல பள்ளிகளில் கல்விச்சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யாமல் விட்டுடுகின்றனர். இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பள்ளிகள் சார்பில் கல்வித்துறைக்கு கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது அனுமதி மறுக்கப்பட்டாலோ பஸ்களுக்கு கொடுத்த முன் பணம் திரும்பப் பெற இயலாமல் போய்விடுகிறது. இதனால் பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்வதில்லை. 

               கல்விச்சுற்றுலா செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த பெயர்ப் பட்டியல் மட்டும் அனுப்பிவிட்டு சுற்றுலா மேற்கொள்ளலாம் என்றும், முன்அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற கெடுபிடிகளை தளர்த்தினால் மட்டுமே மாணவர்களின் கல்விச்சுற்றுலா கனவு நனவாகும். எனவே கல்விச்சுற்றுலா அனுமதி பெற கல்வித்துறை அதிகாரிகள் கெடுபிடிகளை தளர்த்தி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior