மின் கட்டண வசூல் மையங்களில் உள்ளது போல், இணையதள சேவையிலும், முன்பணம் செலுத்தலாம் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை, கோவையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள, இணையதள மின் கட்டண சேவை எளிமையாகவும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உள்ளதால், மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடன் அட்டை, பண அட்டை மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். "30 நாட்கள் மின் கணக்கீடு மற்றும் 30 நாட்கள் மின் கட்டண வசூல்' என்ற புதிய முறை சென்னை மாநகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில், மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தோருக்கு, மின் கட்டணம், அவற்றை செலுத்த கடைசி நாள் குறித்த விவரங்கள் முறையாக, மின் அஞ்சல் மூலம் அறிவிக்கப்படுகின்றன. மற்றவர்களுக்கு இந்த விவரங்கள் அறிவிக்க இயலாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண, கட்டண வசூல் மையங்களில் உள்ளது போன்று, "முன்பணம் செலுத்தும் வசதி' தற்போது இணையதள சேவையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகை ஏதும் இல்லாதோர், இணையதளம் வாயிலாக முன்பணம் செலுத்தலாம். கணக்கீடு செய்யப்பட்ட மின் கட்டணங்கள், தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு நேர் செய்யப்படும். இந்த வசதி தற்போது, சென்னை (வடக்கு, தெற்கு), கோவை மண்டலங்களில் உள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக