கடலூர்:
கடலூர் வழியாக சென்னை- ராமேஸ்வரம் ரயில்பாதை 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்பாதை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலேயே அமைக்கப்பட்டது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்தவை என்றும், புண்ணிய ஸ்தலங்கள் என்றும் போற்றப்படும் கோயில்களை இணைக்கும் பாலமாக இந்த ரயில் பாதை அமைந்து இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இந்த ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றும் திட்டத்தை, தனது திட்டங்களின் கடைசிப் பணியாகக் கருதிச் செயல்படுத்தியது தெற்கு ரயில்வே. இறுதியாக விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதைத் திட்டம் |400 கோடிக்குமேல் செலவிட்டு, 3 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்து முடிக்கப்பட்டது. இறுதியாக நீதிமன்ற உத்தரவுக்குப் பணிந்து 4 மாதங்களுக்கு முன், போனால் போகட்டுமே என்று ரயில்களை இயக்கியது தெற்கு ரயில்வே.
பழமை வாய்ந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டும் அது, மக்கள் அதிகம் பயன்படுத்தும் திருப்பாதிரிப்புலியூர் (எ) திருப்பாப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் நிலை உள்ளது. 400 கோடி செலவிட்டும் மக்களுக்கு இந்த ரயில் பாதையால் என்ன பயன் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முறையற்ற கால அட்டவணையும், நிறுத்தங்களும், மக்களுக்கு சிறிதும் பயனற்ற வகையில் அமைந்து இருப்பது, இந்த மாவட்ட மக்களுக்கு ரயில்வே மதிப்பளிக்க மறுப்பதாகவே அமையும் என்கிறார்கள் பொதுமக்கள்.
சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்தின் தலைநகரின் ரயில் நிலையமான திருப்பாப்புலியூரிலும், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களிலும் நிற்காமல் செல்லும் வகையில், கால அட்டவணை தயாரித்த மர்மம் என்ன என்று தெரியவில்லை. அடுத்து புவனேஸ்வரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தை விட்டால், கடலூர் மாவட்டத்தை ஒருதாவு தாவி, மாயவரத்தில்தான் நிற்கிறது. சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. வாரம் ஒருநாள் இயக்கப்படும் வாரணாசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரல் ரயில் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்த முடியாத, முதுநகர் ரயில் நிலையத்தில் மட்டும் நிற்கிறது.
புனித ஸ்தலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது தெற்கு ரயில்வே என்ற, சிலரது கூற்றுப்படி பார்த்தல்கூட, திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பக்தர்களும், பாடலீஸ்வரர் கோயிலுக்கு 5 லட்சம் பக்தர்களும் வந்து போகிறார்கள். அவர்களுக்கு எளிதான பயணம் ரயில்தான். அப்படியானால் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்பதுதானே சரி?
பெரும்பான்மை மக்களின் வசதிக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அனுமதிப்பதுதான் ரயில்நிறுத்தம். மாவட்டத் தலைநகர், பழமை நகரம், பெரும்பான்மை மக்களின் தேவை என்ற அம்சங்கள் பலவிருந்தும், திருப்பாப்புலியூரில் ரயில்கள் நிற்பதில்லை. ஒரு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த ஆண்டுக்கு |1 கோடி செலவாகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், யாருக்காக இந்த ரயில்பாதை உருவாக்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் மக்கள்.
அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என்ற, கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கையை, அனைத்து பொதுநல அமைப்புகளும் தங்கள் போராட்டங்களின் வாயிலாக பலமுறை வெளிப்படுத்தி விட்டன. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் மார்க்கமாகச் செல்வதால், ஒரு மணி நேரம் தாமதம் ஆகிறது என்று 9 எம்.பி.க்கள் ஒரே நேரத்தில் மக்களவையில் குரல் எழுப்பினர். ஆனால் வழக்கம்போல் கடலூர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசாங்கத்திடம் கோரிக்கையை தெரிவிப்பதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். கடலூர் மக்களின் உணர்வுகள் எப்போது மதிக்கப்படும்?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக