உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

தேர்வு தள்ளிவைப்பால் கடலூர் மாவட்ட ஐ.டி.ஐ. மாணவர்கள் பாதிப்பு

பண்ருட்டி:
 
               கேள்வித்தாள் வெளியான காரணத்தால் ஜூலை 28-ம் தேதி நடைபெற வேண்டிய கருத்தியல் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐ.டி.ஐ. மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
 
                தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) நிலையத்தில் இரண்டாம் ஆண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஜூலை 23-ம் தேதி முதல் தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் 28-ம் தேதி நடைபெற வேண்டிய கடைசித் தேர்வான கருத்தியல் தேர்வின் போது வினாத்தாள் வெளியானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கருத்தியல் தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு சென்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து இதுவரையில் அரசு தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என தொழிற்பயிற்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த தேர்வு முடிந்தால், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் படித்த மாணவர்களுக்கு பயிற்சி முடிந்ததற்கான சான்றிழ்களை வழங்கும். 
 
                         இதை வைத்துக்கொண்டுதான் பயிற்சி முடித்த மாணவர்கள் வேலை தேட முடியும். தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இந்த தேர்வு புதுச்சேரியில் குறிப்பிட்ட தேதியில் நடந்துள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தள்ளி வைக்கப்பட்ட இத்தேர்வு, இம்மாவட்டத்தின் மிக அருகில் உள்ள புதுச்சேரியில் மட்டும் எப்படி நடத்தினர் என சம்மந்தப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் புதுச்சேரியில் இத்தேர்வு முடிந்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியின்றி பணியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.
 
              ரத்து செய்யப்பட்ட தேர்வை நடத்தும் தேதியை அறிவித்தல், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்து தேர்வை நடத்தும் அதிகாரம் ஆகியவை புதுதில்லியில் உள்ள மத்திய வேலை வாய்ப்பு தலைமை ஆணையரிடம் உள்ளது. அவரின் அனுமதி பெற்ற பின்னரே தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.இந்த நடைமுறைகள் கால தாமதமின்றி உடனடியாக நடைபெற்று முடிந்தால்தான் நடப்பாண்டில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தடையின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறமுடியும். காலதாமதமாகும் ஒவ்வொரு நாளும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.
 
இது குறித்து முன்னாள் மேலவை உறுப்பினரும், சக்தி ஐ.டி.ஐ-ன் தலைவருமான அ.ப.சிவராமன் கூறியது: 
 
                 தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வு உடன் நடத்தப்பட வேண்டும். இடைவெளி அதிகமானால் மாணவர்களின் தேர்வு எழுதும் திறன் குறைந்துவிடும். புதுச்சேரியில் தேர்வு நடந்து முடிந்துவிட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior