கடலூர் :
கடலூரில் காங்., கட்சியினர் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன். கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., துணைத் தலைவர். இவர் நேற்று மாலை தனது மோட்டார் பைக்கில் கட்சி அலுவலகத்திலிருந்து மொபைல் போனில் பேசியபடி திருப்பாதிரிப்புலியூர் நோக்கிச் சென்றார். உட்லண்ட்ஸ் சிக்னலில் இருந்த போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பைக்கில் சென்ற ஞானசேகரனை நிறுத்தி எச்சரிக்கை செய்து லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் கேட்டார். அவரிடம் எந்த ஆவணமும் இல்லாததால் வழக்கு பதிவு செய்ய பெயரை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஞானசேகரன், "வண்டியை எப்படி எடுப்பது என எனக்குத் தெரியும்' எனக் கூறி விட்டு பைக்கை அதே இடத்தில் விட்டுச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து கடலூர் நகர காங்., தலைவர் ரகுபதி, சட்டசபை தொகுதி தலைவர் ராமராஜன், காங்., நிர்வாகிகள் சரவணன், செல்வக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் டி.எஸ்.பி.,யை சந்திக்கச் சென்றனர். டி.எஸ்.பி., வர தாமதம் ஆனதால் மாலை 6.15 மணிக்கு, கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து புதுநகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து வழக்கு பதிந்தனர். காங்., கட்சியினரின் மறியலால் நகரின் பிரதான சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக