பழ மரங்களில் ஒட்டுண்ணி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மைய வேளாண் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் பழப்பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தப் பழப் பயிர்களில் பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்பு ஏற்படுவது போல, தண்டு ஒட்டுண்ணித் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றன. இந்த ஒட்டுண்ணிகள் மா மரத்தை அதிக அளவில் தாக்குவதால் இவை "மா ஒட்டுண்ணி' என அழைக்கப்படுகின்றன. இவை மா பயிரைத் தவிர கொய்யா, சப்போட்டா, முந்திரி, மாதுளை, எலுமிச்சை போன்ற பழ மரங்கள், தரிசு நிலங்களில் காணப்படும் மரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களையும் தாக்கக்கூடியவை.
"லோரான்தஸ்' எனப்படும் இந்த ஒட்டுண்ணிகளுக்கு வேர் இல்லாததால் அவற்றுக்குத் தேவையான நீர் மற்றும் உணவுப் பொருள்களுக்கு மரங்களின் தண்டு பாகத்தில் ஒட்டிக் கொண்டு உறிஞ்சும் தன்மை கொண்டவை. இதனால் இவற்றை "தண்டு ஒட்டுண்ணிகள்' எனவும் கூறுகின்றனர். பாதிப்புகள்: ஒட்டுண்ணிகள் தாக்கப்பட்ட கிளைகள் வளர்ச்சிக் குன்றியும், நலிந்தும், இலைகள் சிறுத்தும், நிறம் மாறியும் காணப்படும். தாக்கப்பட்ட கிளைகளில் காய்களின் உற்பத்தி குறைந்து விடும். உற்பத்தியாகும் காய்களும் தரமற்று, சிறிய அளவில் காணப்படும்.
இவை விரைவில் உதிர்ந்து விடும். சில வேளைகளில் தாக்கப்பட்ட கிளைகளில் ஒரே இடத்திலிருந்து அதிக சிம்புகள் தோன்றி, அவற்றின் இலைகள் மிகவும் சிறுத்து குத்தாகக் காணப்படும். இளஞ்செடிகளில் ஒட்டுண்ணி தாக்குதல் காணப்பட்டால் விரைவில் அச்செடிகள் அழிந்துவிடும். கட்டுப்படுத்தும் முறைகள்: தாக்கப்பட்ட கிளைகளை தாக்கிய இடத்திலிருந்து ஒரு அடி தூரம் பின்னாலிருந்து வெட்டி அழித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒட்டுண்ணியின் உறிஞ்சும் உறுப்புகள் பரவிக்கிடக்கும் பகுதிகள் முழுமையாக அழித்து விடும்.
அல்லது ஒரு லிட்டர் தண்ணீருடன் 300-400 மி.லி. திரவ நிலையில் இருக்கும் டீசல் எண்ணெய், 5 மி.லி. திரவ நிலையில் இருக்கும் சோப்பு கலவையை ஒட்டுண்ணியின் மீது தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு:
சுந்தரராஜ்,
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம்,
எலுமிச்சங்கிரி,
கிருஷ்ணகிரி.
தொலைபேசி எண்கள்: 04343-296039, 9443888644, 9842294615.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக