கடலூர்:
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 1-11-2010 அன்று, உள்ளாட்சி தினவிழா சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சியில் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையிலும், இவற்றின் பணிகளை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், உள்ளாட்சி தினவிழாவை 1-11-2010 அன்று சிறப்பாகக் கொண்டாடுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.உள்ளாட்சி தினத்தன்று, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அமைத்தல், நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
விழிப்புணர்வுப் பேரணிகள், கருத்தரங்குகள், மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேசிய மாணவர் சேவை இயக்கம், மற்றும் தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடன், ஊராட்சி மன்றக் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், நீரேற்று நிலையங்கள் போன்ற கட்டடங்களை சுத்தம் செய்தல், வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாணவ மாணவியருக்கு உள்ளாட்சி நிர்வாகம் குறித்து பேச்சுப் போட்டி, பொது அறிவுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக