வண்ணத்துப் பூச்சியினத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
பாரதியார் பல்கலை.யில் திங்கள்கிழமை வண்ணத்துப் பூச்சிகள் பாதுகாப்பு குறித்த பயிலரங்கைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:
வேளாண்மையிலும், சூழல் பாதுகாப்பிலும் பூச்சிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு சில வகைகளைக்காட்டிலும் பெரும்பாலான பூச்சிகள் மனிதர்களுக்கு நன்மை செய்யக் கூடியவையாகவே இருக்கின்றன. வண்ணத்துப் பூச்சி, விட்டில் பூச்சி போன்றவை, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன். இந்தியாவில் ஏறத்தாழ 1,500 வண்ணத்துப் பூச்சி வகைகள் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால், தற்போது மாறி வரும் சூழல் காரணங்களால் வண்ணத்துப் பூச்சிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
விளை நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், காடுகள் அழிப்பு ஆகியன பூச்சிகளின் அழிவுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக ஏராளமான விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது. இத்தகைய உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு அறிவியல் ரீதியாக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இங்கிலாந்து சுற்றுச்சூழல் மையம் பால் வாரிங்: சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாக வண்ணத்துப் பூச்சி இனங்கள் அழிந்து கொண்டே செல்கிறது. இதேநிலை நீடித்தால், வரும் காலங்களில் பூச்சியினங்களைப் பார்க்க முடியாத சூழல் ஏற்படக் கூடும். இந்த நிலையை எப்படி மாற்றுவது என்பதற்கான தீர்வை இதுபோன்ற பயிலரங்களின் மூலமாக முடிவு செய்ய வேண்டும்.
ஹாங்காங் தாவரவியல் பூங்கா விஞ்ஞானி ரோஜர் ஹென்ரிக்:
நகரமயமாக்கல், விவசாய நிலங்கள் குறைவது போன்றவற்றால் பூச்சியினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் பெரும்பாலான பூச்சியினங்கள் அழிந்துவிட்டன. இந்தியா மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் இப் பிரச்னை இருக்கிறது. தற்போது ஆசிய நாடுகளில் வண்ணத்துப் பூச்சிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அறிவியல் சார்ந்த முயற்சிகள், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வனவளத்தைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலமாகத் தான் பூச்சியினங்களை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும் என்றார். பல்கலை.யின் உயிரி அறிவியல் துறையக இயக்குநர் எஸ்.மணியன், விலங்கியல் துறைத் தலைவர் கே.சசிகலா உள்ளிட்டோர் பேசினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக