
இலங்கையில் உள்ள ராஜபட்ச அரசின் முள்வேலி சித்ரவதை முகாமை போல் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.
விழுப்புரத்தில் திங்கள்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியது:
நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 33 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகால கோரிக்கைகளை ஜனநாயக முறையில் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை அந்த சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஆளும் கட்சியால் நடத்தப்படும் தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார்கள். அதை தொழிலாளர்கள் நிராகரித்து விட்டனர்.
தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதிகளை அழைத்து தீர்வு காண்பதற்கு பதிலாக, அவர்களை மிரட்டி பணியவைக்க, தமிழக அரசு காவல்துறையின் மூலம், அவர்களின் வீடுகளில் நுழைந்து, பெண்கள், குழந்தைகளை துன்புறுத்தி, அவமதித்துள்ளனர். பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு பதிலாக நூற்றுக்கணக்கான பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனநாயகப் போராட்டத்தை தடை செய்வது, முடக்குவதிலேயே அரசு முழுக்கவனம் செலுத்துகிறது.
தொழிலாளர்களின் பிரச்னை குறித்து மக்களவை உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமர், சுரங்கத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை விளக்கினர். இருந்தும் இதுவரை திட்டவட்டமான, தெளிவான தீர்வுக்கான வழியை தெரிவிக்கவில்லை. எனவே தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. வரும் 27-ம் தேதி ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. நீங்கலாக அனைத்துக் கட்சிகளும் இதில் கலந்து கொள்கின்றன.
இதுவரை முதல்வர் இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். தொழிலாளர்களுக்கு எதிராகவே திமுக அரசு நடந்து கொண்டிருக்கிறது என்றார். பேட்டியின்போது, மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன், கடலூர் மாவட்டச் செயலர் டி. மணிவாசகம், ஏஐடியுசி மாநிலச் செயலர் ஜே. லட்சுமணன், கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ.வி. ஸ்டாலின்மணி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலர் ஆ. இன்பஒளி, கடலூர் மாவட்டச் செயலர் எம். சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக