நெய்வேலி:
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்பு பட்டியலை நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட முடிவு செய்துள்ளது.சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிர்வாகம் அக்டோபர் 10-ம் தேதி தொமுசவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதையடுத்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் மட்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் 2008-ம் ஆண்டு மத்திய அமைச்சர் முன்னிலையில் புதுதில்லியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், 2010 அக்டோபர் 10-ம் தேதி தொமுசவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 5 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை சொசைட்டியில் இணைப்பது மற்றும் தொழிலாளர்களின் பணிமூப்புப் பட்டியலை வெளியிடுதல் தொடர்பாக நிர்வாகம், தொமுச நிர்வாகிகளுடன் புதன்கிழமை பேச்சு நடத்தியது. அப்போது உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி அந்தந்த தொழிலகப் பகுதி நிர்வாகத் துறை அதிகாரிகள் மூலம், தற்போது பணிக்கு வந்துகொண்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பார்வைக்காக பணிமூப்புப் பட்டியலை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் பின் பட்டியலின்படி பணிக்கு வந்துகொண்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் சொசைட்டியில் இணைப்பது தொடர்பான விண்ணப்பதையும் விநியோகித்து, அதை பூர்த்தி செய்து மீண்டும் அந்தந்தப் பகுதி நிர்வாகத் துறை தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக