உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

கடலூர் சாலைகளின் பரிதாப நிலை: சேற்றில் உருளும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டுகள்

கடலூர்:

                 கடலூர் நகரில் சாலைகளின் பரிதாப நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் புதன்கிழமை சேற்றில் உருளும் போராட்டம் நடத்தினர்.

                      தரமற்ற சாலைகள், அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளுக்குப் பேர்போன கடலூரில், பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்ட பின், சாலைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக மாறிவிட்டது. சாலைகளால் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வரும் சொல்லொண்ணா துயரங்களை மாற்ற, மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த நடவடிக்கை எதையும் எடுத்துவிடவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.  என்றாலும் மக்களின் சகிப்புத் தன்மை அவர்களுக்கு நல்லதொரு கேடயமாக அமைந்து விடுகிறது. எனவேதான் பொதுநல அமைப்புகளின் போராட்டங்கள் அலுவலர்களின் மனப்போக்கில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 

                 கடலூரில் நள்ளிரவில் 30 நிமிடம் மழை பெய்தால்போதும், காலையில் கடலூரில் பல நகர்களில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாது என்ற நிலை.  நடக்கவும் முடியாது, இருசக்கர வாகனங்களை இயக்கவும் முடியாது. ஆனால் 4 சக்கர குளிர்பதன வாகனங்களில் வரும் ஆட்சியாளர்களுக்கோ இதுவெல்லாம் ஒரு பிரச்னையாகவே தெரியவில்லை என்கிறார்கள் பொது  மக்கள். 

                         அண்மைக் காலமாக கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு வீதி, பாதிரிக்குப்பம் கூத்தப்பாக்கம் சாலை (மாநில நெடுஞ்சாலைகள்) ஸ்டேட் பாங்க் காலனி நகராட்சி சாலை ஆகியவை குண்டும் குழியுமாக மாறியதுடன், மழையால் சேறும் சகதியுமாக மாறிவிட்டன. சாலைகளை செப்பனிட துரித நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பாப்புலியூர் காவல் நிலையம் அருகே, புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

                   அதைத் தொடர்ந்து சாலைகளின் பரிதாப நிலையை கண்டித்து 4 இளைஞர்களும் ஒரு பெண்ணும் சேற்றில் உருண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகரச் செயலாளர் வி.சுப்புராயன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன், நகரக்குழு உறுப்பினர் ரஜினிஆனந்த், தியாகராஜன், எஸ்.ராஜாத்தி, தனுசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior