உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை: கடலூர் சிப்காட் பொதுக் கழிவுநீர் அகற்று நிலைய மின்இணைப்பு துண்டிப்பு

கடலூர்:

                சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடலூர் சிப்காட் பொதுக் கழிவுநீர் அகற்று நிலையத்துக்கான மின் இணைப்புகள் அண்மையில் துண்டிக்கப்பட்டன.  

                 கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரசாயனத் தொழிற்சாலைகள்.  இவற்றில் 19 ரசாயனத் தொழிற்சாலைகள் இணைந்து, ரூ.  4 கோடி முதலீட்டில் கியூசெக்ஸ் என்ற பொதுக் கழிவுநீரகற்று நிலையத்தை 2001-ல் உருவாக்கிச் செயல்படுத்தின. இதில் சிப்காட் நிறுவனம் 30 சதவீதம் முதலீடு செய்திருந்தது. இந்த நிறுவனம் தனது உறுப்பு தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பெற்று, கடலுக்குள் செலுத்தும் பணியைச் செய்து வந்தது.  

                    தற்போது கியூசெக்ஸ் நிறுவனத்துடன் 8 தொழிற்சாலைகள் மட்டுமே இணக்கப்பட்டுள்ளன. மற்ற தொழிற்சாலைகள் சொந்தமாக கழிவு நீரகற்று நிலையங்களை உருவாக்கியதாலும், சில தொழிற்சாலைகள் கழிவுநீர் எதையும் வெளியேற்றாமல் 100 சதவீதம் மறுசுழற்சி செய்து, பயன்படுத்துவதாலும் கியூசெக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகிக்கொண்டன. இந்த நிலையில் கியூசெக்ஸ் நிறுவனம் மீது பல புகார்கள் எழுந்தன. 

                   முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுகள், ஆலைகளில் இருந்து கியூசெக்ஸ் நிறுவனத்துக்கு வருவதாகவும், கியூசெக்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் ரசாயனக் கழிவுகள் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மாசு அதிகம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.  

                 2000 ஆண்டு முதல் 5 முறை கியூசெக்ஸ் நிறுவனத்துக்கு, மாசுக் கட்டுப்பாடு வாரியம் இதுதொடர்பாக விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 2004 முதல் குழாய்களில் ரசாயனக் கழிவுகள் கசிவு, உடைப்பு, நீர் நிலைகளில் கழிவுகள் கலத்தல் போன்ற 15 சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  மேலும் கியூசெக்ஸ் நிறுவனம் இயங்குதற்கு, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் தடையில்லாச் சான்று மட்டுமே பெறப்பட்டு இருப்பதாகவும், கட்டுமான இசைவாணை, செயல்படுவதற்கான இசைவாணை, கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் இருந்து அனுமதி பெறப்படவில்லையாம். 

                   ஆனால் மாசுக் கட்டுப்பாடு வாரியம் உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் 2004-ம் ஆண்டு சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து, எம்.நிஜாமுதீன் தலைமையிலான மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு பேரவை, தி அதர் மீடியா, குளோபல் கம்யூனிட்டி மானிட்டரிங், சிப்காட் கம்யூனிட்டி மானிட்டர் ஆகிய அமைப்புகள் இணைந்து, கேஸ் ட்ரபிள் என்ற அறிக்கையை வெளியிட்டன.  இந்த அறிக்கை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில், கியூசெக்ஸ் நிறுவனம், சில தொழிற்சாலைகள், சிப்காட் கம்யூனிட்டி மானிட்டர் ஆகியவை தங்களை இணைத்துக் கொண்டன.  

               வழக்கில் கடந்த 21-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. 4 வாரத்துக்குள் கியூசெக்ஸ் நிறுவனத்தை முடிவிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டபடி, கியூசெக்ஸ் நிறுவனத்துகான மின் இணைப்புகளை, மின்சார வாரியம் வியாழக்கிழமை துண்டித்தது.  

இதுகுறித்து சிப்காட் தொழிற்சாலைகளின் தலைவர் இந்தர்குமார் கூறுகையில், 

                      ""ரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்று கூறித்தான், ஆலைகளுக்கான நிலங்களை சிப்காட் வழங்கியது. கியூசெக்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள ரசாயனத் தொழிற்சாலைகள் இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும். ஒரு சில நாள்கள் மட்டுமே அவை தமது கழிவுகளை ஆலை வளாகத்தில் சேமித்து வைக்க முடியும். அதன்பிறகு ஆலையின் உற்பத்தியை நிறுத்த வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழப்பார்கள்'' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior