கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் மாத ஊதியம் முறையாகக் கிடைக்காமல் குடிநீர் தொட்டி மோட்டார் இயக்குவோர் (டேங்க் ஆபரேட்டர்கள்) பலர் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் 621 ஊராட்சிகள் உள்ளன.
இவற்றில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் மின்மோட்டார்களை இயக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் ஆபரேட்டர்கள் ஈடுபடுகிறார்கள்.இவர்களுக்கு மாத ஊதியம் 6-வது ஊதியக்குழு பரிந்துரைக்கு முன்பு வரை 750 ஆக இருந்தது. தற்போது 1,120 வழங்கப்படுகிறது. இத்துடன் அகவிலைப் படியும் வழங்கப்படுகிறது.இந்நிலையில் குடிநீர் தொட்டி இயக்குவோரை நியமிக்கக் கூடாது என்று 1-1-2007-ல் அரசு உத்தரவிட்டது. எனினும் குடிநீர் தொட்டி இயக்குவோரை ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொடர்ந்து நியமித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஊதியம் தொடர்பாக குடிநீர் தொட்டி இயக்குவோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அவர்களில் பலருக்கு நிலுவைத் தொகை 50 ஆயிரம் வரை வழங்கப்பட வேண்டியது இருக்கிறது.நிதிநிலை சரியாக இருக்கும் பட்சத்தில் இந்தத் தொகையை வழங்குமாறு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உத்தரவு அனுப்பியுள்ளனர்.ஆனால் பல ஊராட்சி நிர்வாகங்கள், இந்த நிலுவைத் தொகையையும் வழங்கவில்லை, மாதாந்திர ஊதியத்தையும் முறையாக வழங்குவதும் இல்லை என்று குடிநீர் மோட்டார் இயக்குவோர் புகார் தெரிவிக்கிறார்கள்.
பல ஊராட்சிகள் 4, 5 மாதங்களாக ஊதியம் வழங்காத நிலையும் இருக்கிறது.ஊராட்சி உதவியாளர்கள், குடிநீர்தொட்டி இயக்குவோருக்கு ஊதியம் முதலில் வழங்கப்பட வேண்டும், அடுத்து மற்ற செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். எனினும் பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் இதைப் பின்பற்றுவது இல்லை. ஊராட்சியில் பணம் இல்லை. பணம் வரும்போது ஊதியம் வழங்குகிறோம் என்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூறுகிறார்களாம்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பின், கடலூர் ஒன்றிய துணைத் தலைவர் (கங்கனாங்குப்பம் ஊராட்சித் தலைவர்) மாறன் கூறுகையில்,
""குடிநீர் தொட்டி இயக்குவோரை நியமிக்க வேண்டாம் என்று அரசு தெரிவித்து விட்டது. இதனால் பல கிராமங்களுக்கு ஒருவர் பணிபுரிகிறார். பல ஊராட்சிகளில் பொதுநிதி மிகவும் குறைவாக உள்ளது. ஊராட்சி உதவியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குவோருக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் பலருக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்க முடியாத நிலையும், அரசு நிதி வரும்போது மொத்தமாக வழங்கும் நிலையும் ஏற்படுகிறது'' என்றார்.
உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
""ஊராட்சிகளுக்கு குடிநீர் தொட்டி இயக்குவோரை நியமிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதை மீறி பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் நியமித்து இருக்கிறார்கள். இதுவே பிரச்னைகளுக்குக் காரணம்.ஊராட்சிகளுக்கு மொத்தமாக நிதி வரும்போது, ஊழியர்களுக்கான ஊதியத் தொகையை நிறுத்தி வைத்து, மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் பலர் நிதி வந்ததும், முழுவதையும் செலவிட்டு விட்டு, மீண்டும் எப்போது நிதி வரும் என்று காத்து இருக்கிறார்கள். இதனால்தான் பல மாதங்கள் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. குடிநீர் தொட்டி இயக்குவோர் நியமனம் மற்றும் ஊதியம் குறித்து அரசுதான் நல்ல முடிவை எடுக்க வேண்டும்'' என்றார் அந்த அதிகாரி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக