உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

கடலூர் மாவட்டத்தில் 200 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை



கடலூர் : 

                   கடலூர் மாவட்டத்தில் நீடித்து வரும் கன மழை காரணமாக வீராணம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிவதால், 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

                 கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவ மழை காரணமாக வீராணம், பெருமாள், வெலிங்டன் ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும், கடந்த 26ம் தேதி நிரம்பின. உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளாறு, பரவனாறு, கெடிலம் மற்றும் பெண்ணையாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 27ம் தேதி முதல் மழையின் தீவிரம் குறைந்து, நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால், கிராமங்களில் சூழ்ந்திருந்த மழைநீர் வடிய துவங்கியது. இந்நிலையில் வங்கக் கடலில் மீண்டும் உருவான புதிய புயல் சின்னத்தால் மீண்டும் மழை தீவிரமடைந்தது.

                  கடந்த 30ம் தேதி தமிழகத்திலேயே அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 22 செ.மீ., அளவு மழை கொட்டியது. ஏற்கனவே நீர் நிலைகள் நிரம்பி வழிந்த நிலையில், கன மழையால் நீர் வடிய வழியின்றி கிராமங்களிலும், வயல்வெளிகளிலும் புகுந்ததால் மாவட்டத்தின் பெரும் பகுதி வெள்ளக்காடானது. குறிப்பாக காவிரி ஆற்றின் வடிகால் பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானது. 

                வெள்ளாற்றின் குறுக்கே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கூடுதலாக வரும் நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு 22 ஆயிரம் கன அடி நீர், படிப்படியாக நேற்று காலை 10 மணிக்கு 86 ஆயிரத்து 675 கன அடியாக அதிகரித்து, வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததில் பல இடங்களில் கரை உடைந்து கிராமங்களில் புகுந்துள்ளது.

                      இதனால் புவனகிரி - சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம் - சேத்தியாத்தோப்பு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளாறு கரையோரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஏற்கனவே பரவானாறில் உடைப்பு ஏற்பட்டு பாதித்த பகுதிகளில், மீண்டும் தண்ணீர் உட்புகுந்ததால், அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிகள், கோவில்கள், சமுதாய நலக்கூடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

                 வயல்வெளிகள் முழுமையாக மூழ்கி கடல் போல் காட்சியளிக்கிறது. வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் வீராணம், பெருமாள் ஏரிகள் நிரம்பி வழிவதை பார்வையிட்ட கலெக்டர் சீத்தாராமன், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தாலுகாக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior