பண்ருட்டி:
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய செமஸ்டர் தேர்வுகளில் சில வினாத்தாள்களில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
2002-ம் ஆண்டு முதல் வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில் மொத்தம் 83 அரசு, நிதி உதவி பெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியின் செமஸ்டர் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் 5-வது செமஸ்டர் தேர்வில் வருமானவரி சட்டம் தேர்வு எழுதியுள்ளனர். முழுக்க முழுக்க கருத்தியல் கேள்விகளாக கேட்கப்பட வேண்டிய வினாத்தாளில் சுமார் 40 சதவீத மதிப்பெண்களுக்கான கேள்விகள் கணக்காக கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்து சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிவித்தனர்.இதேபோல் இரண்டாம் ஆண்டு வணிகப் பொருளியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வினாத்தாளிலும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதே குழப்பம் கடந்த ஆண்டும் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறினர்.பல்வேறு குடும்ப சூழலில் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் மாணவர்களும்; பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்களும் பாடுபடுவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குழப்பம் அடைந்த மாணவர்கள் தொடர்ந்து வந்த தேர்வுகளையும் சரியாக எழுதவில்லை என மன வேதனையுடன் தெரிவித்தனர்.இதேபோல் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலில் ஆப்சென்ட் போடப்பட்டிருந்ததால் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக