கடலூர்:
பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏழைகள் ரதம் ரயிலை, கடலூர் வழியாக இயக்க வேண்டும் என்று கடலூர் அனைத்து நகரக் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் தென் ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாற்காலிகமாக திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று போக உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை நிரந்தரம் ஆக்க வேண்டும். மேலும் செந்தூர், காசி எக்ஸ்பிரஸ் ரயில்களை திருப்பாப்புலியூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையங்களில் நின்று போக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், லூப் லைன் வசதி செய்யப்பட்டு விட்டதால், துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, திருப்பாப்புலியூரில் இருந்து இயக்க வேண்டும்.
புதுவையில் இருந்து பெங்களூர் செல்லும் ஏழைகள் ரதம் ரயில் விழுப்புரம், விருத்தாசலம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. விழுப்புரம், விருத்தாசலம் மார்க்கத்தில் ஏற்கெனவே நெரிசல் அதிகமாகி விட்டதாக, ரயில்வே போக்குவரத்துத்துறை ஆய்வு செய்து அறிவித்து உள்ளது. எனவே கடலூர் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, அந்த ரயிலை புதுவை, விழுப்புரம், கடலூர், விருத்தாசலம் மார்க்கத்தில் இயக்க வேண்டும். இதனால் 11 கி.மீ. தூரம் மட்டுமே அதிகரிக்கும். இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவாய் உயரும்.
பெருங்குடி- கடலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ஆய்வு முடிந்து, அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது. இப்பணியை துரிதப்படுத்த வேண்டும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடலூரில் இருந்து ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தையும் மீண்டும் கடலூரில் இருந்த இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக