உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

உழவர்களுக்கு ஊக்கம் தரும் உளுந்து சாகுபடி


கடலூர்: 

              குறைந்த காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் விவசாயமாக உளுந்து சாகுபடி உள்ளது.  நிறைந்த ஊட்டச்சத்தும் சிறந்த மருத்துவக் குணங்களும் கொண்டது உளுந்து. எனவேதான் உளுந்தின் தேவை, தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதுக்கும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.  

              இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் உளுந்து பயிரிடப்படுகிறது. எனினும் தேவையில் 85 சதவீதத்தை பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் 1990-91ல் 3.36 லட்சம் ஏக்கரில் 1.35 லட்சம் டன் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டது. 2000-2001ல் 2.75 லட்சம் ஏக்கரில் 1.32 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.  
 
                தமிழகத்தில் உளுந்து உற்பத்தி பெரும்பாலும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளையே நம்பி இருக்கிறது. காவிரி பாசனப் பகுதிகளான சுமார் 16 லட்சம் ஏக்கரில் உளுந்து சாகுபடிக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து பயிரிடப்பட்டது.  சம்பா நெல் அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன் வயல்களில் உளுந்து விதைகளை விதைத்து விடுவார்கள். வயல்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் பனியால் உளுந்துப்பயிர் வளர்ந்து 60 நாள்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இதற்குச் செலவு இல்லை. ஏக்கருக்கு குறைந்தபட்சம் 150 கிலோ வரை உளுந்து கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

            இந்த ஆண்டு உரிய காலத்தில் காவிரி நீர் கிடைத்து இருப்பதால் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.  தமிழகத்தில் தற்போது ஏடிடி 3, டி 9, டி.ஓ.யூ.1 வண்பன் ஆகிய உளுந்து ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஏடிடி 3 டெல்டா பகுதிகளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தேவையைக் கருத்தில் கொண்டு, உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  

இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

              "காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு உளுந்து சாகுபடிக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி மூலம் செலவு இல்லாமலேயே ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்.  உளுந்தை தனிப்பயிராக இறவை பாசனத்தில் சாகுபடி செய்தால் 60 நாள்களில் ரூ. 30 ஆயிரத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும். எனவே உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்யவும், நேரடிகொள்முதல் செய்யவும் தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.  

இதுகுறித்து வேளாண்துறை அளிக்கும் தகவல்கள்: 

                 தேசிய உணவு பாதுகாப்பு மிஷன் மற்றும் விரைவுபடுத்தப்பட்ட பயறு வகைகள் சாகுபடித் திட்டம் தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.  இத்திட்டங்களில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் வட்டாரங்களில் தலா 1,000 ஹெக்டேரில் உளுந்து பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  மேற்கண்ட திட்டங்களில் உளுந்து விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், இடுபொருள்கள், பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள், சொட்டு நீர் பாசனக் கருவிகள் வழங்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.     

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior