ஸ்லெட் தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) இம்மாத இறுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் வரவுள்ளது.
பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்குப் பிறகு, ஏப்ரல் மாத இறுதியில் ஸ்லெட் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர் பணிபுரிய ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களை மட்டும் நியமிக்க யு.ஜி.சி. விதிமுறை வகுத்துள்ளது. தேசிய அளவில் உள்ள கல்லூரிகளில் பணிபுரிய நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் நெட் தேர்வை, யு.ஜி.சி. நடத்துகிறது. ஸ்லெட் தேர்வை அந்தந்த மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் ஸ்லெட் தேர்வை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2008-க்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக ஸ்லெட் தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படவில்லை. இதனால், இத்தேர்வை எழுத முதுநிலை மற்றும் எம்.பில். படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வை நடத்தலாம் என்று தமிழக அரசு கடந்த 2010 ஜூலையில் அரசாணை வெளியிட்டது. அரசின் அறிவிப்பு வெளியாகி கிட்டதட்ட 7 மாதங்களாகியும் ஸ்லெட் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாதது மாணவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது குறித்து, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் கூறியது:
வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, செமஸ்டர் தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். செமஸ்டர் தேர்வுக்குப் பிறகு, ஸ்லெட் தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஸ்லெட் தேர்வு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள யு.ஜி.சி. குழுவினர் பிப்ரவரி 20-ம் தேதிக்குப் பிறகு பல்கலைக்கழகம் வரவுள்ளனர். அதைத்தொடர்ந்து, யு.ஜி.சி.யிடம் இருந்து முறையான உத்தரவு கிடைத்தவுடன் ஏப்ரல் இறுதியில் ஸ்லெட் தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த மூன்று ஆண்டுகள் ஸ்லெட் தேர்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்படும். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஸ்லெட் தேர்வை 20,972 பேர் எழுதினர். இதில் வெறும் 465 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 2.21 சதவீதம் தான். தேசிய அளவில் நடக்கும் நெட் தேர்வில் தேர்ச்சி விகிதம் .1 தான். இந்த முறை தேர்வு எழுத அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் சுவாமிநாதன்.
கல்வித் தகுதி என்ன?
ஸ்லெட் தேர்வை எழுத முதுநிலை படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக