உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், பிப்ரவரி 03, 2011

கரும்பு தோகையை உரமாக்குவது எப்படி?


 
                 கரும்பு தோகையை எரிக்காமல் அதை உரமாக்கி பயன்படுத்தும் முறை குறித்து வேளாண் துறையினர் யோசனை கூறியுள்ளனர்.  கரும்பு அறுவடைக்குப் பிறகு பெரும்பாலான விவசாயிகள் கரும்பு தோகையை வயலிலேயே எரித்து விடுகின்றனர். 
 
             இதனால் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் இயற்கை எரு வீணாகிறது.  எருவின் மூலம் கிடைக்கக் கூடிய 100 கிலோ தழைச்சத்து (220 கிலோ யூரியாவுக்கு சமம்) 50 கிலோ மணிச்சத்து (315 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுக்கு சமம்), கந்தகச் சத்துகள் கிடைப்பதில்லை. மேலும் மறுதாம்பு கரும்பின் முளைப்புத்திறன் 30 சதவீதம் குறைகிறது. வளர்ச்சியும் தடைபடுகிறது.  மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் அழிக்கப்படுகின்றன. எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே கரும்புத் தோகையை எரிக்காமல் உரமாக்கி நிலத்தை வளப்படுத்தலாம். 
 
 உரமாக்கும் முறை:  
 
                கரும்பு வயலின் ஒரு மூலையில் 1 மீட்டர் அளவில் குழி எடுக்க வேண்டும். அக்குழியில் 500 கிலோ கரும்பு தோகையினை போட வேண்டும். அதன் மேல் வயல் மண் (அ) கரும்பு ஆலைக்கழிவு (பிரஸ்மட்) 500 கிலோவை இட்டு, அதன் மேல் 10 கிலோ பாறை பாஸ்பேட், 10 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ யூரியா கலவையை தூவ வேண்டும். மேற்கூறிய அனைத்தும் நன்கு நனையும்படி நீர்த் தெளிக்க வேண்டும். 
 
                இவ்வாறு உருவாக்கிய அடுக்கின் மேல் மாட்டுச்சாணம், மக்கிய எரு மற்றும் வயல் மண் கலந்த கரைசலை 500 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். இவ்வாறாக குழி நிரம்பும் வண்ணம் 10 முதல் 15 அடுக்குகள் இடுவதன் மூலம் 5 டன் கரும்பு தோகையை உரமாக்கலாம்.  இறுதியாக உரக்குழியை நில மட்டத்துக்கு மேல் அரை அடி உயரம் மேடாகும் வண்ணம் மண் கொண்டு மெழுகி மூடிவிட வேண்டும்.  மூன்று மாதங்கள் கழித்து குழி முழுவதையும் நன்கு மக்குமாறு கலக்கிவிடவேண்டும். 
 
                      மக்கும் எரு நன்கு நனையுமாறு வாரம் ஒருமுறை நீர்த் தெளித்து பராமரித்தால் ஆறு மாதத்துக்குள் மக்கிய கரும்பு தோகை உரம் தயாராகிவிடும். இதை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தி நல்ல பயன் பெறலாம் என செய்யாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior