நெய்வேலி, நவ. 30:
பாலிதீன் பைகள் இயற்கைக்கு எதிரானவை அல்ல என்றும், இதன் முழு விவரம் பொதுமக்களை சென்றடையாததால், பாலிதீன் பைகளுக்கு எதிரான தேவையற்ற பீதி உருவாக்கப்படுகிறது என்கிறார் நெய்வேலிப் பகுதி பாலிதீன் பை முகவர் மற்றும் விற்பனையாளர்.
நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து என்எல்சி நகர நிர்வாக அலுவலர்கள் வியாழக்கிழமை நெய்வேலியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி பல்வேறு வகையான பாலிதீன் பைகளை பறிமுதல் செய்துள்ளது.
இந்த நடவடிக்கைக் குறித்து நெய்வேலிப் பகுதி பாலிதீன் பை விற்பனையாளர் மற்றும் முகவராக உள்ள ஆர்.பன்னீர்செல்வம் கூறுகையில், “மத்திய அரசு எளிதில் மக்காத 20 மைக்ரானுக்குக் குறைவாக உள்ள பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படிதான் பாலிதீன் பைகள் தயாரிக்கப்பட்டு,அவை நுகர்வோரின் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு எவ்விதத்திலும் பாதிப்படைவதில்லை.
காகிதப் பைகள்தான் பயன்படுத்தவேண்டுமெனில், இருக்கின்ற மரங்களை வெட்டி, அதன்பின்னர்தான் பை தயாரிக்க முடியும். நெய்வேலியில் என்எல்சி நகர நிர்வாகம் 20 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை வரவேற்கிறோம்.
அதே வேளையில் இந்த அறிவிப்பு, பொத்தாம் பொதுவாக பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என்ற மாயை உருவாக்கியிருக்கிறது.
நகர நிர்வாகம் பாலிதீன் பயன்பாடுக் குறித்து பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் பயன்பாடு முடிந்ததும் அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக்கினால் அனைவரும் பயனடையலாம்.÷மேலும் இன்று பிளாஸ்டிக் பைகள் தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், திடீரென அறவே பயன்படுத்தக்கூடாது என்பது பொதுமக்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே 20 மைக்ரான் குறைவாக உள்ள பாலிதீன் பைகள் எவை எவை என பொதுமக்களுக்கு என்எல்சி நகர நிர்வாகம் விளக்கும்பட்சத்தில் இதற்கு நிரந்தரத் தீர்வுக் கிடைக்கும் என்றார் ஆர்.பன்னீர்செல்வம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக