சிதம்பரம், நவ.30:
சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகரமன்றக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், பாமக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் நாற்காலி வீசியெறிந்து வெளிநடப்பு செய்தததால் கூட்டம் கோரம் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டது.÷சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி) தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் பாமக உறுப்பினர் சாந்தி பிரியதர்ஷினி தனது வார்டில் எந்த பணிகளுமே நடக்கவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
அடுத்து காங்கிரஸ் உறுப்பினர் முகமதுஜியாவுதீன் நகராட்சியில் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை. சாக்கடையும், சகதியுமாக குடிநீர் வருகிறது. மத்தியஅமைச்சர் ஜி.கே.வாசன் வழங்கிய நிதி காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.÷சீர்கேடான நிர்வாகத்தை நடத்தி வரும் தலைவரின் கீழ் நகரமன்ற உறுப்பினராக பணியாற்றுவது கேவலமாக இருக்கிறது என்று கூறி விட்டு வெளிநடப்பு செய்தார்.
திமுக உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன் பேசுகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெறும் சிதம்பரம் நகராட்சியில் திமுக, காங், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது.
குடிநீர்ப் பிரச்சனை குறித்து பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடலூர், நெல்லிக்குப்பம், விருத்தாசலம் நகராட்சி, கீரப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மண்சோறு சாப்பிட்டும், நாத்து நடும் போராட்டம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரத்தில் உள்ள மோசமான சாலைகளைக் கண்டித்து ஏன் மண்சோறு சாப்பிடும் போராட்டம் நடத்தவில்லை.
மக்கள் பிரச்னையை தீர்க்க முடியாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கூறினார்.
அப் போது மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சந்திரசேகரன் பதில் பேச முயன்ற போது அவரது மைக்கை பறித்து கண்டன கோஷமிட்டு, திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து நகரமன்றக் கூடம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் 6 பேர் மட்டும் கூடத்தில் இருந்ததால் கூட்டம் கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்படுவதாக தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் அறிவித்து எழுந்து அவரது அறைக்குச் சென்றார்.வெளிநடப்பில் பங்கேற்காத அதிமுக..
கூட் டத்தில் நகராட்சி சீர்கேட்டைக் கண்டித்து பிரச்னை எழுப்ப தயாராக வந்த நகரமன்ற உறுப்பினர்கள் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆதரவு அளிப்பதால் அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யாமல் கூடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
திமுக தலைமையிலான கடலூர் நகரமன்ற நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் சிதம்பரம் நகரமன்ற சீர்கேட்டைக் கண்டித்து திமுகவினர் நகரமன்றக் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக