பண் ருட்டி, நவ.30:
பருவமழை பெய்ததைத் தொடர்ந்து முந்திரி மற்றும் பலா மரங்களுக்கு உரமிடும் பணியில் பண்ருட்டி பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பண்ருட்டி வட்டத்தில் முக்கிய விவசாய விளைப்பொருள்களில் முந்திரி முக்கிய இடம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 28500 ஹெக்டர் நிலப் பரப்பளவில் முந்திரி விளைகிறது.÷ஆண்டு ஒன்றுக்கு சுமார் 22160 மெட்ரிக் டன் முந்திரி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக பண்ருட்டியில் 17000 ஹெக்டர் நிலப்பரப்பில் சுமார் 12200 மெட்ரிக் டன் முந்திரிக் கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.÷இதனால் பண்ருட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான முந்திரி ஏற்றுமதி நிறுவனங்களும், தொளும்பில் இருந்து முந்திரி எண்ணெய் எடுக்கும் தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ÷இங்குள்ள வியாபாரிகள் உள்ளூர் முந்திரி கொட்டைகள் மட்டும் இன்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து முந்திரி கொட்டைகளை கொள்முதல் செய்து, பயிர்களை பிரித்தெடுத்து பதப்படுத்தி பின்னர் ஏற்றுமதி செய்து வருகின்றனர். ÷இதனால் இப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கின்றது.
மேலும் முந்திரிக் காடுகளுக்கு இடையே பலா பயிரிடப்படுகிறது. பலாப் பழத்துக்கு பண்ருட்டி பெயர் பெற்று இருப்பதால் சீசன் காலத்தில் பண்ருட்டியில் இருந்து லாரிகள் மூலம் மும்பை, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.÷இதனால் கெடில நதிக்கு தென் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு முந்திரி மற்றும் பலா விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக பெய்து வந்த பருவமழையால் முந்திரி மற்றும் பலா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.÷இதனால் தற்போது முந்திரி மற்றும் பலா மரங்களுக்கு உரமிடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக