கடலூர்,:
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வசதியாக, கடலூர் மாவட்டத்தில் புறம்போக்கில் குடிசை வீடுகளில் வசித்து வரும் 1,354 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட இருக்கிறது.
மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் 2.10 லட்சம் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இதில் அரசுப் புறம்போக்கில் குடியிருக்கும் சிலருக்கு வீட்டு மனைப் பட்டா இல்லாமல் உள்ளது. எனவே அவ்வாறு அரசுப் புறம்போக்கில் வசித்து வரும் 1,354 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
அவர்களில் 536 பேருக்கு திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டாக்களை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தகுதியான மீதமுள்ள அனைவருக்கும் விரைவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டு உள்ள தகுதியான அனைவருக்கும் 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறினார். மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 356 மனுக்கள் பெறப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 27 பேருக்கும், சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தில் 9 நபர்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக