திட்டக்குடி :
கருணை அடிப்படையில் கல்வித்துறையில் பணி நியமன ஆணையை வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் திட்டக்குடி வட்டத்தலைவர் ராமசாமி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக கல்வித்துறையில் கருணை அடிப்படையில் வேலை கோரிய விண்ணப்பங்கள் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். கடந்த பத்து ஆண்டாக கல்வித்துறையில் மட்டும் கருணை அடிப்படை வேலை சரிபார்ப்பில் காலம் தாழ்த்தி வருகிறது. இதர துறைகளில் விரைவான நடவடிக்கையால் இவ்வகை நியமனம் துரிதமாக செயல்படுத்தி வருகிறது. அனைத்து அலுவலகங்களிலும் கணினி செயல்பாடுகள் உள்ள நிலையில் காலிபணியிடத்தில் அரசு ஆணைப்படி கருணை அடிப்படை நியமன ஒதுக்கீடு 25 சதவீதம் கண்டறிவது மிகவும் எளிதானது என்பது தெளிவானது. கால தாமதமாவதால் ஒருங்கிணைந்த சான்று திருத்தம் அவ்வப்போது செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்நியமனத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் முதிர் கன்னியாக இருந்து வரும் நிலையும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு துரித நடவடிக்கையாக பணி நியமனம் முழுமையாக அனுமதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக