உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

கடலூர் சமூக சேவகிக்கு இந்திய மருத்துவச் சங்க விருது

கடலூர்: 

           கடலூர் சமூக சேவகி சுஜாதா சீனிவாசனுக்கு இந்திய மருத்துவச் சங்கம் விருது வழங்கி  கௌரவித்து உள்ளது.

             டாக்டர் பி.சி.ராய் தினத்தை முன்னிட்டு, இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை ஆண்டுதோறும் சிறந்த சேவை புரியும் மருத்துவர்களுக்கும், மருத்துவத் துறை அல்லாத ஒருவருக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கி கெüரவித்து வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான மருத்துவர்கள் தின (டாக்டர் பி.சி.ராய்) விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த சேவை புரிந்த மருத்துவர்கள் 6 பேருக்கும், மருத்துவத் துறையில் அல்லாத சமூக சேவகி கடலூர் சுஜாதா சீனிவாசனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

            சுஜாதா சீனிவாசனுக்கு டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் விருது வழங்கப்பட்டது. இந்திய மருத்துவச் சங்க தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார் தலைமையில் நடந்த விழாவில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்த விருதை சுஜாதா சீனிவாசனுக்கு வழங்கிப் பாராட்டினார். ரோட்டரி மற்றும் இன்னர் வீல் சங்கங்களில் பணியாற்றி, சமூகத்துக்குத் தேவையான சட்டம் சார்ந்த சேவைகளை, குறிப்பாக குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் சார்ந்த சேவை ஆற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சுனாமி பேரலைத் தாக்குதலின் போது அவர் ஆற்றிய சேவைகளுக்காகவும் அவருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. சுஜாதா சீனிவாசன் இன்னர்வீல் சங்க மாவட்ட ஆளுநராகவும், ரோட்டரி சங்கத்தின் பல்வேறு பதவிகளையும் வகித்து இருக்கிறார். கடலூர் சென்ட்ரல்  ரோட்டரி சங்க சாசனத் தலைவராகவும், சிறார் நீதிமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநில குழந்தைகள் தத்து எடுத்தல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior