உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

காவிரி நீர் இல்லை, காய்கிறது குறுவை கொள்ளிடத்தில் வீணாகிறது மழை நீர்


கொள்ளிடம் ஆற்றில் முட்டம்- மணல்மேடு இடையே கட்டப்பட்டு வரும் பாலத்துக்காக, அமைக்கப்பட்டு உள்ள தாற்காலிக பாலத்தை உடைத்துக் கொண்டு ஓடும் வெள்ளம்.
 
கடலூர்:
 
          காவிரி நீர் கிடைக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. எனவே குறுவை நெல் பயிர் தண்ணீரின்றி காய்ந்து கொண்டு இருக்கிறது. 
 
           ஆனால் கொள்ளிடம் ஆற்றில் 2 ஆயிரம் கன அடிக்கு மேல் மழைநீர், வீணாகக் கடலில் கலந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்காக காவிரி நீரை நம்பி இருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியும் அதைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியும் நடைபெறும். ஆனால், காவிரி நீரை வழங்குவதில் கர்நாடகம் தகராறு செய்யத் தொடங்கியதும், தமிழகத்தின் டெல்டா நிலங்கள் தரிசாகும் நிலை உருவாகி விட்டது. கடந்த 3 மாதங்களில் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வர வேண்டிய, 47 டி.எம்.சி. தண்ணீர் வரவில்லை. எனவே மேட்டூர் அணை நிரம்பாததால், இந்த ஆண்டும் ஜூன் 12-ல் பாசனத்துக்குத் திறக்கப்படவில்லை. எனினும் மேட்டூர் அணை நிரம்பி கொஞ்சமாவது தண்ணீர் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் ஆழ்குழாய்க் கிணறுகளையும், தென்மேற்குப் பருவ மழையையும் நம்பி, டெல்டா மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து இருக்கிறார்கள் நமது விவசாயிகள். 
 
             கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான அழ்குழாய்க் கிணறுகளில் உவர் நீராக இருப்பதாலும், போதிய மழையின்மையாலும் குறுவை நெல்பயிர் காய்ந்து கொண்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சம்பா சாகுபடிக்காவது முன்னரே தண்ணீர் திறக்க வேண்டும் என்று, 20 நாள்களுக்கு மேலாக டெல்டா விவசாயிகள் குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். காவிரி நீர் கேட்டு, கர்நாடகத்துக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருக்கிறார். கல்லணையில் இருந்து குடிநீருக்காகத் திறக்கப்படும் சிறிதளவு நீருடன், மழைநீரும் கலந்து வந்து, கொள்ளிடத்தில்  பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கொண்டு இருக்கிறது. பெருக்கெடுத்து ஓடும் இந்த வெள்ளம், கொள்ளிடம் முட்டம்- மணல்மேடு இடையே கட்டப்படும் பாலத்துக்காக அமைக்கப்பட்ட, தாற்காலிக பாலத்தைச் சிதைத்து, ஓடிக் கொண்டு இருக்கிறது. 
 
           இந்த நீரை கீழணையில் தேக்கி பாசனத்துக்குத் திருப்பி இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்போம் என்கிறார்கள், கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள். ஜூன் 12-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டிய மராமத்துப் பணிகள் (கீழணை ஷட்டர்களைப் பழுதுபார்த்தல், வடவாறு கரைகள் சீரமைப்பு வேலைகள்) இன்னமும் நீடித்துக் கொண்டு இருப்பதே தண்ணீரைத் தேக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயமூர்த்தி கூறுகையில்,
 
            கடந்த 3 நாள்களாக கொள்ளிடத்தில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வீணாக ஓடிக் கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. இதைத் தேக்கி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திருப்பி இருந்தால் சிறிய குளங்கள் நிரம்பும். ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.  கிராம மக்களின் குடிநீர் பிரச்னை தீரும். வாடும் குறுவைப் பயிருக்குச் சிறிதேனும் தண்ணீர் கிடைத்து இருக்கும். வடவாறில் தண்ணீர் திறக்க முடியாவிட்டாலும், ராஜன் வாய்க்காலில் திறந்து இருக்கலாம் என்றார்.
 
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
              ஜூன் 12-ம் தேதிக்குள் மராமத்துப் பணிகளை முடிக்க வேண்டும் என்று அரசாணை இருக்கிறது. அதை ஏனோ அதிகாரிகள் பின்பற்றவில்லை. மழைநீரை தேக்கிவைத்து விநியோகிக்க தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார். கீழணை மற்றும் வடவாறில் மராமத்துப் பணிகள் நடப்பதை பொதுப்பணித்துறை கொள்ளிடம் கீழணை செயற்பொறியாளர் செல்வராஜ் உறுதி செய்தார். இப்பணி ஆகஸ்ட் 15-ல் முடிவடையும் என்றும், மேட்டூர் அணை திறப்பதாக இருந்தால் வேகமாகப் பணிகளை முடித்து விடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior