கடலூர் :
""நாடு முழுவதும் நடப்பாண்டு 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூல் செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது,'' என சென்னை தலைமை கமிஷனர் பத்தானியா கூறினார். கடலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சென்னை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் பத்தானியா தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:
வருமான வரித்துறை கடந்த 1860ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த 24ம் தேதி, 150ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினோம். இந்திய பொருளாதாரத்தில் வருமான வரித்துறை முதுகெலும்பாக உள்ளது. கடந்த ஆண்டு வருமான வரித்துறை மூலம் நாடு முழுவதும் நான்கு லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இந்த தொகையில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தில் கடந்த ஆண்டு 400 கோடி ரூபாய் வருமான வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 500 கோடி ரூபாயாக உயர்த்தி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் ஜூலை 31ம் தேதிக்குள் ரிட்டன்சை தாக்கல் செய்ய வேண்டும்.
வரி செலுத்துவோருக்கு வசதியாக சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளன. இன்டர்நெட் வைத்திருப்பவர்கள், "இ' பைலிங் மூலம் வரி செலுத்தலாம். புதுச்சேரியில் 1.50 லட்சம் பேர் வரி செலுத்துவோர் உள்ளனர். நிறைய பேர் வரி செலுத்தாமல் உள்ளனர்; அவர்களை சர்வே எடுத்து வருகிறோம். எனவே, அவர்களாகவே முன்வந்து ரிட்டன்சை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு சென்னை தலைமை கமிஷனர் பத்தானியா கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக