கடலூர்:
கடலூர் மற்றும் சுற்றுப் பகுதியில் தினமும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடலூர் சுற்றுப்பகுதி கிராமங்களான ராமாபுரம், நல்லாத்தூர், நாணமேடு, கண்டக்காடு, திருவந்திபுரம் போன்ற கிராமங்களில் இருந்து கத்தரி, வெண்டை, அவரை, பாகை, கொத்தவரை, சுரை, பீன்ஸ், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்பட்டு கடலூர், பண்ருட்டி, புதுச்சேரி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
புஞ்சை நிலத்தில் பயிர் செய்யப்படும் காய்கறி பயிருக்கு அதிக தண்ணீர் தேவை இருக்காது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச் சினாலே போதுமானது.ஆடி மாதப்பட்டத்தில் காய்கறி, நெல் விதைப்பது வழக்கம். தற்போது விதைக்கப்படும் காய்கறி பயிருக்கும் அளவான தண்ணீர்தான் வேண்டும். வழக்கமாக அக்டோபர் மாதங்களில் எப்போதாவது ஒரு முறை தான் மழை பெய்யும். மழை பெய்யும் போது நெல், கம்பு போன்றவற்றை விவசாயிகள் விதைப்பு செய்வர்.
தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பகலில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. கடந்த 15 நாட்களாக இதே போன்ற நிலை நீடித்து வருவதால் காய்கறி பயிர்கள் மடிந்து வருகின்றன. ஏற்கனவே காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகள் காலாவதியாகி வருகின்றன. அதேபோல் தொடர்ந்து நிலம் ஈரமாக இருந்து வருவதால் புதியதாக வளர்ந்துள்ள காய்கறி பயிர்களுக்கும் களை வெட்ட முடியாமல் மண்டி உள்ளது. இதனால் காய்கறி உற்பத்தி தொடர்ந்து பாதிக்கும் நிலை உள்ளதால் விளைச்சல் குறையும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக