கடலூர்:
கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குக் கொள்ளிடம் கீழணையில் இருந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) தண்ணீர் திறக்கிறார்.
அத்துடன் பல்வேறு அரசு விழாக்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார். கடலூர் மாவட்டத்தில் காவிரி நீரால், 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சென்னை குடிநீருக்கும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது. இவற்றுக்காக கொள்ளிடம் கீழணையில் இருந்து காவிரி நீர் புதன்கிழமை காலை 9 மணிக்கு திறந்து விடப்படுகிறது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கீழணையின் மதகுகளைத் திறந்து விடுகிறார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு ராசாப்பேட்டையில் சுனாமி குடியிருப்பை அமைச்சர் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு காரைக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 30 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடத்தையும், கே.புதூரில் முழுநேர ரேஷன் கடையையும் அமைச்சர் திறந்து வைக்கிறார்.மாலை 5 மணிக்கு திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடத்தையும், மாலை 6 மணிக்கு சி.என்.பாளையத்தில் 1.28 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும் சி.என்.பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியைத் திறந்து வைத்து, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குகிறார்.மாலை 7 மணிக்கு சஞ்சீவிராயன் கோயிலில் ரேஷன் கடைத்திறப்பு, 7-30 மணிக்கு ராமாபுரத்தில் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குதல் நிகழ்ச்சி ஆகியவற்றிலும் அமைச்சர் பங்கேற்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக