பண்ருட்டி:
பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள பிரதான கால்வாய் அடைபட்டு கழிவுநீர் வெளியே வழிந்தோடியதால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன் பொதுமக்களும் அவதி அடைந்தனர்.
பண்ருட்டி நகர நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாகவே கழிவுநீர் கால்வாய்களை பராமரிக்கத் தவறிவிட்டது. இதனால் பல்வேறு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்து மண் மூடி உள்ளன. இதுகுறித்து நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலமுறை முறையிட்டும் நகர நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கழிவுநீர் கால்வாய்களில் அடைபட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்தாமலேயே, பல லட்சம் ரூபாய் செலவில் கால்வாய்களின் உயரத்தை உயர்த்தியது நகர நிர்வாகம்.
இந்நிலையில் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே செல்லும் பிரதான கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கடந்த இரு நாள்களாக கழிவுநீர் வெளியேறி ஓடியது, இதனால் அவ்வழியே சென்ற பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்தனர். பின்னர் வந்த நகராட்சி ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி கழிவு நீர் வழிந்து வெளியே வராமல் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக