கடலூர்:
கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை காரணமாக, வீராணம் ஏரியின் பாசன மதகுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன.
டெல்டா பாசனப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருப்பதால், கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு, வீராணம் ஏரியின் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. கடைமடைப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவுப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பெய்துவரும் மழையே நடவுப் பணிகளுக்குப் போதுமான அளவில் உள்ளது. எனவே வீராணத்தின் நேரடிப் பாசன வாய்க்கால்களின் ஷட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
வீராணத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு 502 கன அடி வீதமும், சென்னைக் குடிநீருக்கு 74 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ÷வீராணம் ஏரியின் நீர்மட்டம் திங்கள்கிழமை, 44.2 அடியாக (மொத்த உயரம் 47.5 அடி) உயர்ந்துள்ளது. இந்நிலையில் வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் கீழணையில் நீர் விநியோகிக்கும் வடவாறிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. கொள்ளிடம் கீழணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 8.5 அடியாக உள்ளது (மொத்த உயரம் 9 அடி).
கொள்ளிடம் கீழணையில் இருந்து கடலூர் மாவட்ட சம்பா பாசனத்துக்காக வடக்கு ராஜன் வாய்க்காலில் 420 கன அடி, நாகை மாவட்டப் பாசனத்துக்காக தெற்கு ராஜன் வாய்க்காலில் 136 கன அடி, குமுக்கி மண்ணியாறில் 78 கன அடி, ஏனைய வாய்க்கால்களில் 15 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதுதொடர்பாக பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில்,
""டெல்டா பாசனப் பகுதிகளில் பெரும்பாலும் நடவு முடிந்து விட்டது. கடைமடைப் பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பெய்துவரும் மழை, நடவுப் பணிகளுக்கு போதுமானதாக இருக்கிறது. எனவே வீராணம் ஏரி மதகுகளை பாசனத்துக்கு மூடிவிடுமாறு விவசாயிகள் தெரிவித்தனர். தேவைப்பட்டால் மதகுகள் திறக்கப்படும்'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக