உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

இந்த ஆண்டாவது நிரம்புமா வெலிங்டன் ஏரி? நம்பிக்கையுடன் காத்திருக்கம் விவசாயிகள்


 
கடலூர்:
 
                   இந்த ஆண்டு ஏரி நிரம்பும் என்ற நம்பிக்கையில் வெலிங்டன் நீர்த்தேக்க விவசாயிகள் காத்து இருக்கிறார்கள்.  
 
                     வறண்டப் பகுதியான திட்டக்குடி வட்டம் கீழச்செறுவாய் பகுதியில் அமைந்து இருக்கும் வெலிங்டன் நீர்த் தேக்கம், 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் உள்ள 67 கிராமங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், இந்த ஏரியின் ஆயக்கட்டுகளாக உள்ளன. ஏரியின் கரை 300 மீட்டர் நீளத்துக்கு தொடர்ந்து பூமிக்குள் அழுந்திக் கொண்டு இருந்ததால், பலவீனப்பட்டு வந்தது. 
 
                     அண்மையில் ரூ. 30 கோடி செலவிட்டு, கரையைப் பலப்படுத்தியதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனினும் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏரி, முழுக் கொள்ளளவுக்கு நிரம்புகிறது என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.   கடந்த ஆண்டு ஏரிக்கரை சீரமைப்புப் பணி நடைபெற்றதால் ஏரியில் தண்ணீர் பிடிக்கவில்லை. 2008-ம் ஆண்டு வெள்ளாற்றில் நீர்வரத்து இல்லை. அதனால் அந்த ஆண்டும் ஏரி நிரம்பவில்லை.  
 
                  இந்த ஆண்டு வெலிங்டன் நீர்த்தேக்க விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக, வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல் நாளே, ஏரியின் நீர் மட்டம் 9.1 அடியாக உயர்ந்து இருக்கிறது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு உயரம் 32 அடி. ஏரிக்கரை அண்மையில் செப்பனிடப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு 23 அடி உயரம் மட்டுமே நீர் தேக்கலாம் என்று பொதுப் பணித் துறை அறிவுறுத்தி உள்ளது.  ஏரியில் நீர்மட்டம் 21 அடியைத் தொட்டதும் பொதுப் பணித் துறை, விவசாயிகளுடன் கலந்து பேசி பாசனத்துக்கு நீர் திறப்பது பற்றி அறிவிக்கும்.  
 
                      வெலிங்டன் ஏரி மேல்மட்டக் கால்வாய் பாசனப் பகுதிகள் மோட்டார் பம்பு செட் வசதிகளைக் கொண்டது. இப்பகுதியில் தற்போது 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல், 10 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.   கீழ் மட்டக் கால்வாய் பகுதிகளான பெருமுளை, சிறுமுளை, புதுக்குளம், ஆதமங்கலம், நாவலூர், இளமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் ஏக்கரில் தற்போது மானாவாரிப் பயிர்கள்தான் உள்ளன.  
 
                    ஏரி நிரம்பினால் முதல் கட்டமாக கீழ்மட்டக் கால்வாய் பகுதிகளான 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையும். இந்த ஆண்டு வெலிங்டன் ஏரி நிரம்பி கீழ்மட்டக் கால்வாய் பகுதிகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் பெரிதும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.  
 
இது குறித்து வெலிங்டன் ஏரிப் பாசன விவசாயிகள் சங்கச் செயலர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 
 
                    "10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வெலிங்டன் ஏரி நிரம்புகிறது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாளன்றே ஏரி நீர் மட்டம் 9.1 அடியாக உயர்ந்து விட்டது.  சேலம் பகுதியில் நல்ல மழை பெய்ததால், வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் கனஅடி வீதம் ஏரிக்குத் தண்ணீர் வந்தது. சனிக்கிழமை 236 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.  
 
                                  ஏரி நிரம்புவதன் மூலம் முதல்கட்டமாக கீழ்மட்டக் கால்வாய் பாசனப் பகுதிக்கு தண்ணீர் விடப்படும். அப்பகுதி முழுவதும் நெல் பயிரிட விவசாயிகள் காத்து இருக்கிறார்கள்.  மேல்மட்டக் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டாலும், ஏரியில் தண்ணீர் இருந்தால் ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். பெண்ணாடம் பகுதியில் 1960-களில் 5 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம், தற்போது 50 அடிக்குக் கீழே போய்விட்டது. வெலிங்டன் ஏரிக்கு போதுமான அளவு நீர் வரத்துக்கு வகை செய்ய, அரசு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். வெலிங்டன் ஏரி நிரம்பினால் வறண்டுக் கிடக்கும் திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் தண்ணீர் பிரச்னை தீரும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior