கடலூர்,நவ.13:
கடலூர் மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.410 கோடி மதிப்பில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா சனிக்கிழமை (14.11.09) தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கால்நடை மருத்துவ முகாம், இலவச பொது மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கூட்டுறவு வாரவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் மண்டல இணைப் பதிவாளர் வெங்கடேசன், மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் ந.மிருணாளினி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா இன்று காலை மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவைச் சிறப்பாக்க கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
நடப்பு நிதி ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.410.22 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. குறுகிய காலக் கடன் ரூ.94.30 கோடி, மத்திய காலக் கடன் ரூ.1.46 கோடி, நகைக்டன் ரூ.314 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்களிடம் இருந்து வைப்புத் தொகையாக மத்திய கூட்டுறவு வங்கி ரூ.6,115 கோடியும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ரூ.23.75 கோடியும், கூட்டுறவு நகர வங்கிகள் ரூ.44 கோடியும், சேகரித்து உள்ளன. மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கணினிமயம் ஆக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஒருமாதத்தில் முடிவடையும். தற்போது 7 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. மற்ற சங்கங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக