கடலூர்,நவ. 13:
ஆண், பெண் ஜைனத் துறவிகள் 20 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் வந்தனர்.
அன்பு, சமாதானம் உள்ளிட்ட நற்போதனைகளை மக்களிடையே எடுத்துரைக்கும் பணியில் ஜைனத் துறவிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஆண்டில் 8 மாதங்கள் பாத யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கும் சென்று, மக்களிடம் உபதேசம் செய்கிறார்கள்.
ஜைனத் துறவி ஆச்சார்ய ஸ்ரீ 108 தேவ் நந்திஜி மகாராஜ், அவரின் சீடர் உபாத்யா ஸ்ரீ 108 நிஜாநஞ்சி மகாராஜ் உள்ளிட்ட 11 ஆண் துறவிகளும், 9 பெண் துறவிகளும் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் கங்கனாங்குப்பம் வந்தனர். அவர்களை ஜைன சங்கம் ராஜ்கோல்ஷா மற்றும் கடலூர் ஜைன சங்கத்தினர் வரவேற்றனர். துறவிகளை வணங்கி ஆசி பெற்றனர்.
நிர்வாண நிலையில் இருக்கும் துறவிகள் கங்கனாங்குப்பத்தில் உள்ள ஜி.ஆர்.கார்டனில் தங்கி தியானத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலூர் மாவட்டம் போளூர் அருகே உள்ள திருமலை ஜைனப் பள்ளி மாணவர்களுக்கு துறவிகள் ஆன்மிகப் பாடம் போதிக்கின்றனர். மற்றவர்கள் கடலூர் வந்தனர். சனிக்கிழமை ஆண் துறவிகள் கடலூர் முதுநகரில் உள்ள திகம்பரநாதர் ஜைன கோயிலுக்கு வருகை தருகிறார்கள். அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகில் உள்ள மேல்செவரி திருநெற்குன்றம் ஜைனக் கோயிலுக்குச் செல்கிறார்கள். அதைத் தொடர்ந்து செஞ்சி அருகே மேல்சித்தாமூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்ஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக