உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

மின்வாரியப் பொறியாளர்கள் போராட்டம்

கடலூர், நவ. 13:

சாலைகள் மோசம் அடைந்ததால் பஸ்கள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, மின்வாரியப் பொறியாளர்களும் ஊழியர்களும் அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகே வண்டிப்பாளையத்தை அடுத்த கேப்பர் மலையில் மின்வாரிய துணை மின் நிலையம் மற்றும் பல்வேறு அலுவலகங்களை உள்ளடக்கிய, மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் உள்ளது. நகரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இந்தத் துணை மின் நிலையம் மற்றும் அலுவலகம் உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.
கடலூர்- கேப்பர் மலை மாநில நெடுஞ்சாலை 10 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கிறது.
என்ன காரணத்தாலோ நெடுஞ்சாலைத் துறை கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட இச்சாலை பழுதடைந்து, கிராமச் சாலைகளைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. தற்போது பெய்த அடைமழையில் இச்சாலை மிகமிக மோசமான நிலையில் உள்ளது.
இதனால் கடந்த இரு நாள்களாக இந்த மார்க்கத்தில் செல்லும் நகர பஸ்கள் நிறுத்தப்பட்டன.
கேப்பர் மலைமேல் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் இந்த பஸ்கள், கடலூர் முதுநகர் வழியாகத் திருப்பி விடப்பட்டன. எனவே வண்டிப்பாளையம், கேப்பர் மலை, மத்திய சிறைச்சாலை குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அந்தப் பகுதிகளுக்கு ஆட்டோக்கள், டாக்ஸிகள் செல்லவும் மறுத்துவிட்டன.
அந்தப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் நகரில் உள்ள தங்களின் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை நடந்தே வந்தனர்.
இந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள், தங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததைக் கண்டித்து கேப்பர் மலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறியாளர்கள், ஊழியர்கள் சுமார் 200 பேர் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நகரில் இருந்து தொலைவில் உள்ள இந்த அலுவலகத்துக்கு, வந்துசெல்ல தங்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரினர்.
இதில் சி.ஐ.டி.யூ. சார்பில் இளநிலைப் பொறியாளர் ஸ்ரீதர், பழநிவேல், தொ.மு.ச. சார்பில் ஈஸ்வரன் ராஜ்மோகன், என்.எல்.ஓ. சார்பில் சேகர், பொறியாளர்கள் சங்கம் சார்பில் பழநிவேல், சிங்காரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேற்பார்வைப் பொறியாளர் ரவிராம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினார். மின் வாரிய வாகனங்களை இயக்குவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் பேசி, பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பொறியாளர்கள் ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior