கடலூர், நவ. 29:
கடலூரில் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவில் உள்ள சாலைகளை, வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது. கடலூர் அருகே நத்தப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட பெண்ணை கார்டன் என்ற மனைப் பிரிவு 15 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.இந்த நிலையில் 2003, 2004, 2008-ம் ஆண்டுகளில் இந்த மனைப் பிரிவில் பொதுப் பயன்பாட்டுக்கான சாலைகளாக அங்கீகரிக்கப்பட்ட இடங்கள், 4 நபர்களுக்கு வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்ணை கார்டன் நலச் சங்கத் தலைவர் ஜி.சம்பந்தம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், காவல்துறை ஆகியவற்றில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே சம்பந்தம் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சாலை களை வீட்டு மனைகளாக விற்பதற்கும், அவற்றில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் தடைவிதிக்க மனுவில் கோரி இருந்தார். வழக்கை நீதிபதி பி.ஜோதிமணி அண்மையில் விசாரித்து இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், நகர மற்றும் ஊரக திட்ட உதவி இயக்குநர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நத்தப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர், ஜோதி நகர் மின்வாரிய உதவிப் பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக