கடலூர்:
முதல்வர் கலைஞர் வீட்டுவசதி திட்டத்துக்காகத் தகுதி வாய்ந்த குடிசை வீடுகளைத் தேர்ந்து எடுக்க, கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 60,168 குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். தமிழக கிராமங்களில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு கலைஞர் வீட்டுவசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிதி ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்துக்கு கணிசமான வீடுகள் கட்ட நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.÷2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் 1.95 லட்சம் குடிசை வீடுகள் இருக்கலாம் என்று தெரிகிறது. கடலூர் மாவட்டத்தில் 681 ஊராட்சிகளில் குடிசைவீடுகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 29-3-2010 அன்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் அடங்கிய குழு இக் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது.
கணக்கெடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கணக்கெடுப்புப் பணி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது. இப்பணியை 15-5-2010 க்குள் இறுதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. 7-ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 குடிசை வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உள்ளது. 42 ஊராட்சிகளில் முழுமையாக நடைபெற்று உள்ளது. மண், சுடப்படாத செங்கல், சுட்ட செங்கல், போன்றவற்றால் சுவர்கள் அமைத்து ஓலைக்கூரை வேய்ந்த வீடுகளும் இத் திட்டத்தில் கணக்கெடுக்கப்படும். கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் வரும்போது குடும்ப உறுப்பினர்கள் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும். குடும்ப அட்டை, மின் இணைப்பு விவரம், வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பட்டா அல்லது பத்திரம் காண்பிக்க தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். கணக்கெடுப்பின் போது வீடு பூட்டப்பட்டு இருந்தால், கணக்கெடுப்புக்குக்குழு தனது பணியை நிறைவு செய்யும் முன்போ, மேலாய்வுப் பணி நிறைவடையும் முன்போ, பூட்டிய வீட்டின் குடும்ப உறுப்பினர் திரும்பிய நிலையில், கணக்கெடுப்புக் குழு மேற்படி நபரிடம் ஆவணங்களைப் பெற்று உறுதி செய்யும். கணக்கெடுப்புக் குழுவிடம் சரியான தகவல்கள் மற்றும் ஆவணங்களைக் காண்பித்து, கணக்கெடுப்புப் பணி துல்லியமாகவும் விரைவாகவும் முடித்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.